உலகம் முழுவதும் ஜூலை 10ஆம் தேதி வெளியாகவுள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில், தினேஷ் ராஜ் மற்றும் ஜி. தனஞ்செயன் தயாரித்துள்ள இப்படத்தில் பவிஷ் நாராயண் மற்றும் நாகா துர்கா கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
விழாவில் பேசிய நடிகர் பவிஷ், படத்தின் மீதான நம்பிக்கையையும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார். நடிகை நாகா துர்கா, இந்த படம் தனது திரைப்பயணத்தில் முக்கியமான இடத்தைப் பெறும் என்றும், இளைஞர்களை கவரும் காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான கதையாக இருக்கும் என்றும் கூறினார்.
இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன், தயாரிப்பாளர்கள் வழங்கிய முழு சுதந்திரம் மற்றும் படக்குழுவின் ஒத்துழைப்பால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்க முடிந்ததாக தெரிவித்தார்.
விழாவில் கலந்து கொண்ட செல்வராகவன், கஸ்தூரி ராஜா, வனிதா விஜயகுமார், ரம்யா, தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் படத்தை பார்வையாளர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி, ரசிகர்களின் ஆதரவை கேட்டுக்கொண்டனர்.
‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தில் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபாக்ஸ்ன் இசையமைத்துள்ள இப்படம், காதல், உறவுகள் மற்றும் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஜூலை 10 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

