IFFI திரைப்பட விழாவின் ‘காலா பிரீமியர்’ பிரிவில் திரையிடத் தேர்வான ஒரே தமிழ்ப் படம் – ‘கூடு’

கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI), பனோரமா ஸ்டுடியோஸ், ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘கூடு’ (KOODU) திரைப்படம், மதிப்புமிக்க ‘காலா பிரீமியர் ஃபீச்சர் ஃபிலிம்’ பிரிவில் திரையிடத் தேர்வாகியுள்ளது. இந்த ஆண்டு இப்பிரிவில் தேர்வாகியுள்ள ஒரே தமிழ்த் திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் VJ கதிரவன், ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ், ரச்சிதா மகாலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு கிராமத்தில் அரிய வகைப் பறவைகள் மின்மாற்றிக்குள் கூடு கட்டுவதைத் தொடர்ந்து, அந்தக் கிராம மக்கள் எடுக்கும் வித்தியாசமான முடிவை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. மனிதர்களுக்கும் இயற்கைக்குமான உறவு, பரிவு, ஒற்றுமை மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை உணர்வுப்பூர்வமாகப் பேசும் படமாக இது உருவாகியுள்ளது.

இயக்குநர் ஜோயல் விஜய் அறிமுகமாகும் இப்படம், கிராமிய வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்டு சாதாரண மக்களின் மனிதநேயத்தையும், கூட்டாகச் செயல்படுவதன் வலிமையையும் எடுத்துரைக்கிறது. நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான கதை சொல்லலுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.

இந்தியாவின் முக்கியமான திரைப்பட விழாவில், குறிப்பாக காலா பிரீமியர் பிரிவில் ‘கூடு’ தேர்வாகியிருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்துள்ளது. தயாரிப்பாளர்கள் குமார் மங்கட் பதக், அபிஷேக் பதக், எம். கணேஷ் மற்றும் ஆதித்யா ஜோஷி ஆகியோர் இந்த அங்கீகாரம் படத்தின் கதைக்கு கிடைத்துள்ள முக்கியமான வரவேற்பு எனக் குறிப்பிட்டுள்ளனர். இயக்குநர் ஜோயல் விஜய்யும், நீண்ட முயற்சிக்குப் பிறகு தங்களது படைப்பு சர்வதேசத் திரைப்படத் தளத்தில் திரையிடப்படுவது ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் மறக்க முடியாத தருணம் எனத் தெரிவித்துள்ளார்.

பனோரமா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. ‘கூடு’ திரைப்படம் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இதன் காலா பிரீமியர் திரையிடல் நடைபெறவுள்ளது.