கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட  கொடநாடு எஸ்டேட்

கண்காணிப்பு கேமராக்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில்  தற்போது பொருத்தப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் இந்த பங்களாவில் காவலாளியாக வேலை பார்த்து வந்த ஓம் பகதூர் என்பவர் பங்களாவுக்கு அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். மற்றொரு காவலாளி படுகாயத்துடன் மீட்கப்பட்டார். பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்களை திருட முயற்சிக்கும் போதே கொலை நடைபெற்றதாக கூறப்பட்டது. இதனை அடுத்து காவலாளியை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டிய நடவடிக்கையில் போலீசார் இறங்கினர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட இருந்த நிலையில் மர்மமான முறையில் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனிடையே கொடநாடு கொலை வழக்கு குறித்து விசாரிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனி விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தார். மேலும், பாதுகாப்பிற்காக கொடநாடு பங்களாவை சுற்றிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதன் பேரில் தற்போது கொடநாடு பங்களாவை சுற்றிலும் 7 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.