‘2018’, ‘மாளிகப்புரம்’, ‘ரேக்காசித்திரம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த காவ்யா ஃபிலிம் கம்பனி, நடிகர் ஆர். சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு தனது ‘புரொடக்ஷன் நம்பர் 12’ திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி தயாரிக்கும் இந்த படம், காவ்யா ஃபிலிம் கம்பனியும் சரத்குமாரும் இணையும் முதல் திரைப்படமாகும்.
‘கிங்ஸ்டன்’ படத்தின் இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி இயக்கும் இப்படத்தில், இதுவரை காணாத வித்தியாசமான மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கவுள்ளார். ரசிகர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்கும் வகையில் வலுவான கதைக்களத்துடன் படம் உருவாகிறது.
படத்தின் ஒளிப்பதிவை கோகுல் பெனாய், இசையை ஜஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பை கலைவாணன் ஆர் கவனிக்கின்றனர். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்தை தமிழ் பிரபா எழுதியுள்ளார்.
படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கி, நவம்பர் 2026-க்குள் நிறைவடைய உள்ளது. 2027 தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைப்பு மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளன. இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடையே தற்போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

