விஜய் சேதுபதி – மடோனா செபாஸ்டியன் ஒரே கல்லூரியில் படித்து வரும் இருவரும் தொடக்கம் முதலே காதலித்து வருகின்றனர். காதலுடன் சந்தோஷமாக தனது கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து வரும் இந்த ஜோடி படிப்பை முடிக்கும் தருவாயில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர். ஊடகத்துறையின் மீது அதீத பிரியமுள்ள விஜய் சேதுபதிக்கு, சுமார் 2 வருடங்களுக்கு பிறகு, அக்ஷய் சய்கல் நடத்தி வரும் பிரபல தொலைக்காட்சியில் வேலை கிடைக்கிறது. அதே நிறுவனத்தில்தான் மடோனாவும் வேலை செய்து வருகிறார். அது ஒருபுறம் இருக்க, அரசியல்வாதியாக வரும் போஸ் வெங்கட்டுக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குடிநீர் ஏரி ஒன்றில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சமூக அமைப்பு ஒன்று போராட்டம் நடத்துகிறது. இதில் விக்ராந்த் மற்றும் அவரது தோழி உள்ளிட்டோர் போஸ் வெங்கட்டுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் இறங்குகின்றனர். இதனால் கடுப்பாகும் போஸ் வெங்கட் அந்த அமைப்பின் போராட்டத்தை தடுக்கும் விதமாக, தனது ஆட்களை விட்டு, விக்ராந்தின் தோழியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்க, அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். இந்த தகவல் தனது தோழியான மடோனாவிற்கு தெரிய வர அந்த பெண்ணை பார்க்க செல்லும் மடோனா, விஜய் சேதுபதி அவளிடம் வீடியோ பேட்டி ஒன்றை எடுத்து வருகிறார்கள். இதயைடுத்து தான் பணிபுரியும் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில், அந்த வீடியோவை வெளியிடுகின்றனர்.
இதனால் கடுப்பாகும் போஸ் வெங்கட் அந்த தொலைக்காட்சியின் நிறுவனரான அக்ஷதீப் சய்கலை தொடர்பு கொள்ள இருவருக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் பேசி அந்த செய்தியை மாற்றி வெளியிடுகின்றனர். முதல்வன் பட பாணியில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. இதில் விஜய் சேதுபதி, போஸ் வெங்கட்டை பேட்டி எடுக்கிறார். அந்த பேட்டியில் அவருக்கு எதிரான கேள்விகளை கேட்கக் கூடாது என்றும், அவரது புகழ் பாடும் பேட்டியாக எடுக்க மேலிடம் உத்தரவு போடுகிறது.
அந்த பேட்டியை நேரிலையில் பார்த்த, விக்ராந்த், மற்றும் பாதிக்கப்பட்ட பெண் விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டு கதற, ஏற்கனவே நிர்வாகத்தின் மீது கோபத்தில் இருக்கும் விஜய் சேதுபதி, கோபத்தின் உச்சத்திற்கு செல்ல போஸ் வெங்கட்டிடம் சரமாரியாக கேள்விகளை பொறிந்து தள்ளுகிறார். அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப தொலைக்காட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கிறது. இதனையடுத்து, தனது வேலையை உதறிதள்ளும் விஜய் சேதுபதி, எந்த ஒரு பிரச்சனையையும் துணிச்சலுடன் சந்திக்கும் டி.ராஜேந்தர் நடத்தி வரும் ஒரு சிறிய சேனலில் சேருகிறார். அந்த சேனல் மூலம் போஸ் வெங்கட், அக்ஷதீப் செய்யும் தவறுகளை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டுகிறார். அவர்களை எப்படி வீழ்த்தினர்? என்பது கவணின் மீதிக்கதை.
வெகுநாட்களுக்கு பிறகு திரையில் காட்சியளித்துள்ள டி.ராஜேந்தர் கலக்கி இருக்கிறார். அவரது வசனங்களும், செய்கைகளும் பார்ப்பவர்களுக்கு ஆர்வத்தையும் கூட்டுகிறது. தான் வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். விஜய் சேதுபதி அவருக்கே உரித்தான ஸ்டைலில், நடித்திருகிறார். அவர் பேசும் வசனங்கள் ரசிக்கும்படியும், சிந்திக்கும்படியும் இருக்கிறது. கல்லூரி மாணவர், தொலைக்காட்சி நிருபர் மற்றும் சமூக ஆர்வலர் என கலக்கியிருக்கிறார். பத்திரிக்கை நிருபராக இவரது தோற்றம் ரசிக்க வைக்கிறது. மீடியாவில் வேலை செய்யும் பெண்ணாக வரும் மடோனா செபாஸ்டியனும் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படத்தில் அவரது நடிப்பு பேசுப்படியாக இருக்கிறது.
விக்ராந்த் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அவரது கோபமும், உணர்ச்சியும் மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும். மீண்டும் தமிழ் சினிமாவில் தலைகாட்டியுள்ள அக்ஷதீப் சய்கல் இப்படத்திலும் மிரட்டி இருக்கிறார். போஸ் வெங்கட் அரசியல்வாதியாகவே வாழ்ந்திருக்கிறார். அரசியல் ரவுடியாக தனது மற்றொரு முகத்தை காட்டியிருப்பது காட்சிகளோடு ஒன்றியிருக்கிறது. சில மீடியாக்களில் தவறு நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். அதேசமயம் சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள், உண்மைச் செய்திகளை கொடுத்து, அதே மீடியா மூலமே தவறுகளை சுட்டிக்காட்ட முடியும் என்பதையும், அதற்கு விடை காணமுடியும் என்பதையும் விளக்கியிருக்கிறார்கள் இப்படத்தில்.
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்