டோரா – சினிமா விமர்சனம்

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தன் மகள் நயன்தாராவுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது தந்தை தம்பி ராமையா விரும்புகிறார். இதற்காக, குலதெய்வம் கோயிலுக்கு நயன்தாராவை அழைத்துச் சென்று வழிபட முடிவு செய்து, கால் டாக்சி நிறுவனம் நடத்தி வரும் பணக்கார தங்கையிடம் சென்று டாக்சியை இலவசமாக அனுப்புமாறு கேட்கிறார். பணக்கார திமிருடன் நடந்துகொள்ளும் தங்கை, அவர்களை அவமானப்படுத்தி அனுப்புகிறார். அவமானத்தில் திரும்பும் நயன்தாராவும், தம்பி ராமையாவும் சொந்தமாக கால்டாக்சி நிறுவனம் தொடங்க முடிவெடுக்கிறார்கள்.

செகண்ட் ஹேண்டில் கார் பார்க்க செல்லும் அவர்களது கண்ணில் ஒரு பழங்காலத்து கார் ஒன்று தென்படவே, நயன்தாரா அதை வைத்து புதுமையான முறையில் விளம்பரம் செய்து சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறார். அந்த காரை வைத்துக்கொண்டு சிறியதாக கால் டாக்சி நிறுவனம் தொடங்குகிறார் நயன்தாரா. அவளது கால் டாக்சி நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் குவியாவிட்டாலும், அவ்வப்போது ஆர்டர்கள் வருகிறது. அப்படி ஒருநாள், கொடைக்கானலுக்கு செல்ல வாடிக்கையாளர் ஒருவர் இவர்கள் நிறுவனத்தை நாடுகிறார். அப்போது, நயன்தாரா தனது காருக்கு ஒரு டிரைவரை போட்டு கொடைக்கானலுக்கு அனுப்பி வைக்கிறார்.

கொடைக்கானலுக்கு செல்லும்போது, அங்கு வழியில் செல்லும் ஒரு நபரை பார்த்தவுடன், அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தானாகவே சென்று அந்த நபரை துரத்துகிறது. ஆனால், அந்த நபரை பிடிக்கமுடியாமல் போனவுடன் அங்கேயே நின்றுவிடுகிறது. காரில் பயணம் செய்த அனைவரும் பதட்டத்தில், காரில் இருந்து இறங்கி ஓடிவிடுகிறார்கள்.இது நயன்தாராவுக்கு தெரியவே, தனது காரை மீட்பதற்காக கொடைக்கானல் போகிறார். கொடைக்கானலில் இருந்து தனது காரை ஊருக்கு எடுத்து வரும்போது, அதே நபர் மறுபடியும் குறுக்கிட, கார் நயன்தாராவின் கட்டுப்பாட்டை இழந்து அந்த நபரை துரத்தி கொல்கிறது. 

என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒருநிமிடம் திகைத்து நிற்கும் நயன்தாரா, இதற்காக ஒரு சாமியாரை சந்திக்கிறார். அவர் காரில் ஒரு நாயின் ஆவி இருப்பதாகவும், அந்த ஆவி சிலபேரை கொல்ல துடிப்பதாகவும் கூறுகிறார். மேலும் அந்த நாய்க்கு தேவையான ஒன்று நயன்தாராவிடம் இருப்பதாகவும் கூறுகிறார்.  இவ்வாறு சிக்கலில் மாட்டிக் கொண்ட நயன்தாரா அந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டார்? அது கொலை செய்ய துடிக்கும் நபர்கள் யார்? நயன்தாராவை வைத்து ஏன் அந்த நபர்களை பழி வாங்குகிறது? என்பது படத்தின் மீதிக்கதை.

நயன்தாராவுக்கு இப்படம் நல்ல நன்றாக அமைந்துள்ளது. முதல் பாதியில் காமெடியாகவும், பிற்பாதியில் நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். தம்பி ராமையா உடன் வரும் காட்சிகளில் கலகலப்பான மகளாகவும், திகில் காட்சிகளில் மிரட்டியுமிருக்கிறார். தம்பி ராமையா காமெடியிலும், தந்தை-மகள் பாசத்திலும் கலக்கியிருக்கிறார். ஹரிஷ் உத்தமன், பிளாஸ்பேக்கில் வரும் சிறுமி சிறப்பாக நடித்துள்ளனர். மற்ற கதாபாத்திரங்கள் தங்கள் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்