1993ஆம் ஆண்டு மும்பையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக அபு சலீம், கரீமுல்லா கான், பெரோஸ் கான் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த ஜூன் மாதம் இவர்கள் 5 பேரும் குற்றவாளிகள் என தடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பிட்டது. இதனை தொடர்ந்து இவர்களுக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன.
அதன்படி அபு சலீம், கரீமுல்லா கான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இவர்கள் இருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் பெரோஸ் கான் மற்றும் தாஹிர் மெர்ச்சண்ட் ஆகியோருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 5-வது குற்றவாளியான ரியாஸ் சித்திக்கிற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.