தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ஏப்ரல் 2-ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் விஷால் தலைமையில் போட்டியிடவுள்ள அணியினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.விஷால் அணியில் கெளரவச் செயலாளர் பதிவிக்கு போட்டியிட்டும் ஞானவேல்ராஜா பேசுகையில், “தயாரிப்பாளர் தாணுவால் இம்முறை ஒரு அணியை உருவாக்க முடியவில்லை. அவரை நம்பி யாரும் போகமாட்டேன் என்கிறார்கள்.2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தொலைக்காட்சி உரிமை நன்றாக இருந்தது. முன்னாள் நிர்வாகிகளில் தாணு அணியின் முக்கியமான வாக்குறுதி என்னவென்றால், பெரிய படங்களிலிருந்து, சிறு படங்கள் வரை அனைத்து படங்களின் தொலைக்காட்சி உரிமையை விற்றுத் தருவேன் என்றார்.தயாரிப்பாளர் சங்கத்துக்கு என்றைக்கு தாணு தலைவராக வந்தாரோ, ரஜினி படத்துக்கும் தொலைக்காட்சி உரிமையை வாங்காத சூழ்நிலையை உருவாக்கிவிட்டார்.
‘கபாலி’ தொலைக்காட்சி உரிமை இன்னும் விற்கவில்லை. அதே நிலை தான் ‘தெறி’ படத்துக்கும். விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றால், ‘கபாலி’ மற்றும் ‘தெறி’ ஆகிய படங்களின் தொலைக்காட்சி உரிமையை விற்றுத் தருவோம். தொலைக்காட்சி உரிமைகளில் நிலவும் பிரச்சினையை அதிகபட்சமாக ஒரு வருடத்துக்குள் சரிசெய்வோம்” என்று பேசினார் ஞானவேல்ராஜா. மேலும், ஞானவேல்ராஜா தன்னுடைய பேச்சில் தயாரிப்பாளர் டி.சிவா மற்றும் தாணுவை கடுமையாக சாடியது குறிப்பிடத்தக்கது.