சிறுமி நரபலி பெங்களூர் அருகே மந்திரவாதி, உறவினர் உள்பட 4 பேர் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூரை அடுத்த ராம்நகர் மாவட்டம் மாகடியை அடுத்த சுன்னக்கல் பகுதியை சேர்ந்தவர் முகமது நூருல்லா (வயது 45). இவரது மகள் ஆயிஷா (10). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 1-ஆம் தேதி வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்த போது ஆயிஷா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். எங்கு தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் மாகடி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான ஆயிஷாவை தேடி வந்தனர். இந்த நிலையில் பெங்களூரு அருகே உள்ள ஒசனஹள்ளி காட்டுப் பகுதியில் சாக்கு மூட்டையில் வைத்து கட்டப்பட்ட நிலையில் ஒரு சிறுமியின் பிணம் கிடப்பதாக மாகடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்த போது அதனுள் மாயமான சிறுமி ஆயிஷா கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிணமாக இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த சாக்கு மூட்டையை சுற்றிலும் மஞ்சள் பொடி தூவப்பட்ட நிலையில் எலுமிச்சை பழமும் கிடந்தது. இதையடுத்து சிறுமியை நரபலி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது வெளியான பரபரப்பு தகவல்கள் வருமாறு,   

ஆயிஷாவிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது மாமா முகமதுவாசிலின் சகோதரர் முகமது ரபீக் கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்தார். பல ஆஸ்பத்திரிகளில்  சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதையடுத்து முகமது வாசில் அந்த பகுதியை சேர்ந்த மந்திரவாதியான நாசிம்ராஜ் என்பவரை தொடர்பு கொண்டு தனது சகோதரர் நிலை குறித்து கூறினார். உடனே முகமது ரபீக்கின் வீட்டிற்கு சென்ற நசீம்தாஜ் சிறுமியை நரபலி கொடுத்தால் இந்த நோயை எளிதாக குணப்படுத்தி விடலாம் என்று கூறினார். இதை நம்பிய முகமது வாசில் பக்கத்து வீட்டை சேர்ந்த ஆயிஷாவை கடத்தி நரபலி கொடுக்க திட்டமிட்டார்.

அதற்காக ஆயிஷாவை தனது செல்போனில் படம் பிடித்து மந்திரவாதியான நசீம்தாஜிக்கு அனுப்பினார். அவரும் இந்த சிறுமியை கடத்தி நரபலி கொடுத்தால் நோயை குணப்படுத்தி விடலாம் என்று உறுதி அளித்தார். கடந்த 1-ஆம் தேதி ஆயிஷா வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்த போது முகமது வாசில் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவருடன் சேர்ந்து சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் நள்ளிரவில் ஓசனஹள்ளி காட்டுப்பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்று மாந்திரீக பொருட்கள் வைத்து மந்திரவாதி நசீம்தாஜ் சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து சிறுமியை நரபலி கொடுத்தனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் இருக்க ஆயிஷாவின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி அந்த பகுதியில் வீசி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியை நரபலி கொடுத்ததாக முகமது வாசில், பெங்களூரு கோரிபாளையம் பகுதியை சேர்ந்த ரசீத்உன்னிகா (38), மந்திரவாதி நசீம் தாஜ் (38) மற்றும் 17 வயது வாலிபரையும் போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே நேற்று மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.சீமந்த்குமார் சிங் ராம்நகரில் நிருபர்களிடம் கூறியதாவது, ஆயிஷாவை மீட்ட பகுதியில் மாந்திரீக பொருட்கள் கிடந்ததால் நரபலி கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தினோம். அது உறுதி செய்யப்பட்டதால் அதில் தொடர்புடைய 4 பேரை கைது செய்துள்ளோம். மேலும் இதில் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.