காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் சரவணன் பழனியப்பன் தயாரித்திருக்க, கே.சி.சுந்தரம் கதை எழுதி இயக்கியிருக்கிறார், ஜூலை காற்றில் படத்தை. ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன், சதீஷ், முத்துராமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நண்பன் கல்யாணத்தில் நாயகி அஞ்சு குரியனை சந்திக்கிறார் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நாயகன் அனந்த் நாக். இருவரும் நண்பர்களாக பழக வாய்ப்பு கிடைக்கிறது. சில நாட்களில் அனந்த் நாக் மீது காதல் வயப்படுகிறார் அஞ்சு குரியன். இவர்களது திருமணத்தை இருவீட்டாரும் முடிவு செய்து நிச்சயதார்த்தம் செய்கிறார்கள்.
அஞ்சு குரியன் மீது காதல் வயப்படாத அனந்த் நாக் அவரிடமிருந்து விலகி இருக்கிறார். இச்சூழ்நிலையில், அனந்த் நாக், தன் அலுவலகத்துக்கு வரும் சம்யுக்தா மேனன் மீது காதல் கொள்கிறார். ஏற்கனவே வேறு ஒருவருடன் காதலை பிரேக் செய்த சம்யுக்தா மேனனும் அவருடன் பழக ஆரம்பிக்கிறார்.
சம்யுக்தா மற்றவர்களுடன் பேசுவதை விரும்பாத அனந்த் நாக், அவற்றை தவிர்க்க சொல்கிறார். அது சம்யுக்தாவுக்கு பிடிக்காமல் இருவரும் பிரிகிறார்கள்.
இறுதியில் அஞ்சு குரியன்-அனந்த் நாக் காதல் வென்றதா? இல்லை அனந்த் நாக்-சம்யுக்தா மேனன் சேர்ந்தார்களா? என்பதே ஜூலை காற்றில் படத்தின் மீதிக்கதை.
ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் மூவரும் முக்கோண காதலர்களாக நடித்துள்ளனர். அஞ்சு குரியன் அழகு பதுமையாக ரசிகர்களை ஈர்க்கிறார். சம்யுக்தா மேனன் கவர்ச்சியில் கவருகிறார்.
காமெடிக்கு சதீஷ், அப்பாவாக முத்துராமன் என அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் ரசிக்கும்படியாக உள்ளது பாடல்கள்.
மொத்தத்தில் “ஜூலை காற்றில்” காதலர்களின் மனதை வருடி செல்லும் காற்று