நிதி மற்றும் மானியம் வழங்களில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்கவும் ஜன்தன் யோஜனா எனும் வங்கி கணக்கு துவங்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு துவங்கி வைத்தது. இந்த திட்டம் துவங்கி இன்றோடு 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஜன்தன் திட்டம் மூலம் லட்ச கணக்கான மக்கள் பயனடைந்து உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “இன்றோடு ஜன்தன் யோஜனா 3 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த தினத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த ஏழை எளிய மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
2011-ஆம் ஆண்டு புள்ளி விபரப்படி, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தற்போது வரை 58% பேரே வங்கி கணக்கு துவங்கி இருந்தனர். நிதி கட்டமைப்பில் ஜன்தன் புரட்சியை படைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அதிக அளவிலான மக்களுக்கு வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. ஜன்தன்-ஆதார்-மொபைல், இவை மூன்றும் பொது சேவை வழங்களில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜன்தன் – ஜன் சுராக்ஷ – முத்ரா ஆகியவற்றின் மூலம் லட்ச கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். ஏழை எளிய மக்களை நிதித்துறையின் முதன்மை வட்டத்திற்குள் கொண்டு வர உருவாக்கப்பட்டது ஜன்தன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் 29.52 கோடி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.
கிராம புறங்களில் 17.64 கோடி பேருக்கும், நகர் புறங்களில் 11.88 கோடி பேருக்கும் வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 65,844.68 கோடி ரூபாய் பயனாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 22.71 ரூபே டெபிட் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஜன்தன் யோஜனா, சமூக பாதுகாப்பு திட்டங்கள், முத்ரா மற்றும் ஸ்டாண்ட் அப் இந்தியா போன்றவை மூலம் லட்ச கணக்கானோர் பயனடைந்துள்ளனர். ஏழைகளின் வாழ்க்கையில் தரம்வாய்ந்த மாற்றத்தை கொண்டு வருவதற்கான நமது முயற்சிகள் மிகுந்த உற்சாகத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.