சென்னையைச் சேர்ந்த மம்தா கட்டாரியா என்ற எம் பி ஏ படித்த பட்டதாரி இல்லற வாழ்க்கையை துறந்து, ஸந்நியாசம் வாங்கிக் கொண்டிருக்கிறார். இது குறித்த சென்னை அயனாவரத்தில் உள்ள டாடிபாடி ஜைன ஆலயத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
‘ஜைன மதத்தின் தத்துவங்களை எடுத்துரைப்பதற்காகவும், அதனை பரப்புரை செய்வதற்காக ஜைன துறவிகள் சுற்றுபயணம் மேற்கொள்வதுண்டு. அது போன்ற தருணங்களில் யாரேனும் துறவற வாழ்க்கையை வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தால், அவர்களுக்கு தீக்ஷா வழங்கப்படும். அதனை மூன்று நாள் வைபவமாகக் கொண்டாடுவார்கள். அது போன்றதொரு விழா தான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சென்னை தி நகரில் வசித்து வரும் மம்தா கட்டாரியா என்ற 29 வயது எம் பி ஏ படித்த பட்டதாரி பெண் சாதாரண லௌகீக வாழ்க்கையை புறந்தள்ளி துறவியாக வாழ உறுதி கொண்டிருக்கிறார். அவருக்கு இங்கு வருகைத்தந்திருக்கும் ஜைன மதத் துறவிகள் தீக்ஷா வழங்கி அவரை துறவியாக்குவார்கள்.
அதன் பிறகு அவர் குமாரி மம்தாவாக இருந்து சந்நியாசி மம்தாவாக மாறிவிடுவார். அத்துடன் துறவிகளுக்கான கட்டுப்பாட்டைக் கடைபிடிக்கத் தொடங்குவார். தலையை மழித்து, வெள்ளை உடையை அணியவேண்டும். எங்கு சென்றாலும் கால்நடையாகவே செல்லவேண்டும். மாலை ஆறு மணிக்கு மேல் எதனையும் சாப்பிடக்கூடாது. நான்கு மாதத்திற்கு மேல் எங்கும் தங்கக்கூடாது. ‘வாழு வாழவிடு’ என்பது போன்ற ஜைன மதக் கருத்துகளை பரப்புரை செய்து கொண்டேயிருக்கவேண்டும்.
‘கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி எல்லா உயிரும் தொழும்’ என்ற திருக்குறளில் திருவள்ளுவர், ‘ஒரு உயிரையும் கொல்லாமல், புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை, இந்த உலகத்திலிலுள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.’ என்று ஜைன மதத்தின் தத்துவங்களை அற்புதமாக சொல்லியிருப்பார். இதன் மூலம் ஜைன மதத்திற்கும், புத்த மதத்தினருக்கும் இடையே உள்ள சிறிய வேறுபாட்டையும் சுட்டிகாட்டியிருப்பார் திருவள்ளுவர்.
இந்த ஆலயத்தில் இதுவரை மூன்று பெண்கள் துறவறம் மேற்கொண்டிருக்கிறார்கள். அதே போல் இது போன்ற வைபவத்தின் போது சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான ஜைனர்கள் இங்கு வருகைத்தந்து ஜைன துறவிகளிடம் ஆசி பெறுவார்கள்.’ என்றார்.