இவன் ஒரு துணிச்சல்காரன் – சினிமா விமர்சனம்

மும்பையில் கல்லூரி மாணவனாக வருகிறார் மகேஷ்பாபு. நடிப்பில் ஆர்வம் இருக்கும் மகேஷ்பாபு கல்லூரி விடுமுறை  நாட்களில் சின்ன சின்ன விளம்பரங்களில் மாடலாகவும் நடித்து வருகிறார். மும்பையின் பிரதான பகுதியில் உள்ள கல்லூரியில்  படித்து வரும் மகேஷ் பாபு சிறு வயதிலிருந்தே தனது மாமாவான பிரகாஷ்ராஜின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வருகிறார்.  பிரகாஷ்ராஜ் மும்பை புறநகரில் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். பிரகாஷ்ராஜ் மீது மிகுந்த அன்பாகவும், பாசமாகவும்  இருக்கும் மகேஷ்பாபு கல்லூரி விடுமுறை நாட்களில் தனது வீட்டிற்கு சென்று வருகிறார். சுற்றிலும் மலைகளுடன் கூடிய சுற்றுலாப் பகுதியில் இருக்கும் அந்த ஊருக்கு ஐதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து  சுற்றுலா வரும் ப்ரீத்தி ஜிந்தா மீது முதல் சந்திப்பிலேயே காதல் கொள்கிறார் மகேஷ்பாபு. ஆனால் ப்ரீத்தி ஜிந்தாவோ கண்டுகொள்ளாமல் இருக்கிறார். எனினும் ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே காதல்  மலர்கிறது. பின்னர் இருவருக்கும் இடையேயான காதல் பிரகாஷ் ராஜுக்கு தெரிய வருகிறது. இவர்களது காதலுக்கு மறுப்பு  தெரிவிக்கும் பிரகாஷ்ராஜின் பேச்சை கேட்டு ப்ரீத்தி ஜிந்தாவுடனான காதலை முறித்துக் கொள்கிறார் மகேஷ்பாபு. அதனைத்தொடர்ந்து அதற்கான காரணத்தை ப்ளாஸ்பேக்காக கூறுகிறார். விவசாயிகளை கொடுமைப்படுத்தும் வில்லனாக வரும்  ஜெயப்பிரகாஷிடம் இருந்து விவசாயிகளையும், அவர்களது நிலங்களையும் மீட்கும் போராட்டத்தில் மகேஷ்பாபுவின்  தந்தையான கிருஷ்ணமூர்த்தியையும், தாயையும் ஜெயப்பிரகாஷின் ஆட்கள் கொலை செய்கின்றனர். தாய், தந்தையை  இழந்துதவிக்கும் மகேஷ்பாபுவை ஜெயப்பரகாஷின் தங்கையின் கணவனான பிரகாஷ் ராஜ் அழைத்துக் கொண்டு மும்பை  செல்கிறார்.  அப்போது பிரகாஷ்ராஜுடன் வர மறுக்கும் அவரது மனைவியிடம், தனது மகளை மகேஷ் பாபுவையே திருமணம் செய்ய   வைப்பதாக சபதம் செய்ததாகவும் கூறிய பின் மகேஷ் பாபுவுடன் ஐதராபாத் செல்லும் பிரகாஷ்ராஜுக்கு ப்ரீத்தி ஜிந்தாதான்  தனது மகள் என்று தெரிய வருகிறது. பின்னர் மகேஷ்பாபு-ப்ரீத்தி ஜிந்தா இருவருக்கும் இடையேயான காதல் மீண்டும் மலர்கிறது. இந்நிலையில், பிரகாஷ்ராஜின் சபதத்தை நிறைவேற்றி ப்ரீத்தி ஜிந்தாவை மகேஷ்பாபு மணக்கிறாரா, விவசாயிகளை மகேஷ்பாபு  காப்பாற்றுகிறாரா என்பது படத்தின் ஸ்வாரஸ்யமான மீதி கதை. தனது முதல் படத்திலேயே மகேஷ்பாபு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மாணவனாக நடிப்பது முதல் காதல்,  சண்டை காட்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும் ப்ரீத்தி ஜிந்தா சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக காதல் காட்சிகளில் அவரது  நடிப்பு அனைவரையும் ஈர்க்கிறது.  படத்தில் சிலகாட்சிகளில் வந்தாலும் பிரமானந்தம் மற்றும் எம்.எஸ்.நாராயணாவின் நகைச்சுவைகள் சிரிக்கும்படி உள்ளது.  படத்தின் இயக்குநர் கோவாலமுடி ராகவேந்திர ராவ் சிறப்பாக திரைக்கதையை அமைத்துள்ளார். காதல், சண்டை, காமெடி என  அனைத்து காட்சிகளையும் ரசிக்கும் படி அமைத்துள்ளது சிறப்பு. மணி சர்மாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது. ஒளிப்பதிவாளர் அஜயன் வின்சண்ட் படத்தை சிறப்பாக காட்சிபடுத்தியுள்ளார்.