முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதனால் கடந்த 26 வருடங்களாக பேரறிவாளன் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். பேரறிவாளன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மகனை பரோலில் விடுவிக்க வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து அவருக்கு கடந்த ஆகஸ்ட்டில் ஒரு மாதம் பரோல் கொடுக்கப்பட்டது.
மேலும் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ராஜிவ் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பாக பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில், சி.பி.ஐ சிறப்புக்குழு விசாரணை அறிக்கையை அளிக்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து இன்றைய விசாரணையில் வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பான சி.பி.ஐ சிறப்புக்குழு விசாரணை அறிக்கையை பேரறிவாளனுக்கு தர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், தற்போதைய சூழலில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சிபிஐ சிறப்புக்குழு விசாரணை அறிக்கையின் அடிப்படையில், பேரறிவாளன் பதில்மனு தாக்கல் செய்தால், அவர் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.