இருமுடி கட்டு – விமர்சனம் : அப்பா – மகள் பாசத்தில் அழுத்தமான சமூகக் கதை

விவசாயத்தை வாழ்க்கையாக கொண்ட ரவி தேஜாவுக்கு, பல ஆண்டுகள் காத்திருந்து ஐயப்பனை வேண்டிய பிறகு பிறந்த மகள் என்ற காரணத்தால், மகள் மீது அளவுகடந்த பாசம். அதே அளவுக்கு ஐயப்பன் மீதும் தீவிர பக்தி கொண்டவர். ஆனால், ஒருபுறம் பக்தியில் தீவிரமாக இருக்கும் அவர், மறுபுறம் மதுவுக்கு அடிமையானவராக இருப்பது அவரது கதாபாத்திரத்தில் இருக்கும் முரண்பாடாக காட்டப்படுகிறது.

இந்நிலையில், தனது மகள் படிக்கும் பள்ளியில் ஒரு மாணவி மர்மமான முறையில் உயிரிழக்கிறார். மற்றொரு மாணவி திடீரென படிப்பை நிறுத்திவிட்டு காணாமல் போகிறார். இதற்கிடையில், ஆசிரியை சுவாசிகா சில மாணவிகளை சிறப்பு வகுப்பு என்ற பெயரில் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

இந்த தொடர் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான உண்மையை ரவி தேஜாவின் மகள் தெரிந்து கொள்கிறார். அந்த மாணவிகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், தந்தையிடம் விஷயத்தை சொல்ல முயற்சிக்கிறார். ஆனால், ரவி தேஜாவின் மது பழக்கமும், ஐயப்பன் மாலை அணிந்திருக்கும் காலத்தில் அவர் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடுகளும் மகளின் முயற்சிக்கு தடையாகின்றன.

இறுதியில் மகளின் வார்த்தைகள் தந்தையை சென்றடைந்ததா? அந்த மாணவிகளுக்கு என்ன நடந்தது? அவர்களை ரவி தேஜா காப்பாற்றினாரா? என்பதற்கான பதில்களை உணர்வுப்பூர்வமான திரில்லர் மற்றும் மாஸ் காட்சிகளுடன் சொல்ல முயற்சிக்கிறது ‘இருமுடி கட்டு’.

மாஸ் மகாராஜா என்ற அடையாளத்துடன் வலம் வரும் ரவி தேஜா, இந்தப் படத்தில் தனது வழக்கமான மாஸ் பாணியை சற்றே குறைத்து, கதாபாத்திரத்தின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கிறார். குறிப்பாக மகள் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு நெகிழ வைக்கிறது.

அதே நேரத்தில், பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அறிந்து கொண்டு, அவர்களை தனது மகள்களாகவே கருதி ரவி தேஜா களமிறங்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு தேவையான மாஸ் தருணங்களாக அமைந்துள்ளன.

ரவி தேஜாவின் மனைவியாக வரும் பிரியா பவானி சங்கர், கதையின் உணர்வுப்பூர்வமான பகுதிகளுக்கு அழுத்தம் சேர்க்கிறார். மகளாக நடித்திருக்கும் சிறுமி நக்‌ஷத்ரா குறிப்பாக பாராட்டப்பட வேண்டியவர். அதிகமான வசனங்களை நம்பாமல், பார்வை மற்றும் முகபாவனைகள் மூலமாகவே பல உணர்வுகளை கடத்தும் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது.

சாய் குமார், அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, சுவாசிகா உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். அவர்களின் திரை இருப்பு படத்தின் திரில்லர் அம்சத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு படத்தின் மூன்று வெவ்வேறு உணர்வுகளை அழகாக பதிவு செய்திருக்கிறது. குடும்ப செண்டிமெண்ட், கிரைம் திரில்லர் மற்றும் மாஸ் காட்சிகள் என கதையின் தன்மைக்கு ஏற்ப கேமரா மொழியும் மாறுகிறது.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன. குறிப்பாக பின்னணி இசை அப்பா – மகள் உறவை மையப்படுத்திய காட்சிகளுக்கு உணர்வுப்பூர்வமான வலிமையை கொடுக்கிறது. சில காட்சிகளில் இசையே உணர்வுகளை மேலும் ஆழப்படுத்துகிறது.

பிரவீன் பவுடியின் படத்தொகுப்பு படத்தின் வேகத்தை சரியான முறையில் தக்க வைத்திருக்கிறது. குடும்பக் காட்சிகள், மர்ம சம்பவங்கள், திரில்லர் பகுதிகள், மாஸ் தருணங்கள் என வெவ்வேறு தன்மையிலான காட்சிகளை ஒன்றோடொன்று இணைத்திருக்கும் விதம் படத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.

எழுதி இயக்கியிருக்கும் சிவா நிர்வாணாவின் மிகப்பெரிய பலம், எளிமையான கதைக்குள் பல்வேறு உணர்வுகளை திறம்பட இணைத்திருப்பது. மாஸ் ஹீரோவை வைத்து ரசிகர்களை திருப்திப்படுத்தும் அதே நேரத்தில், கதையின் மைய நோக்கத்திலிருந்து விலகாமல் சமூகத்திற்கான முக்கியமான கருத்தையும் சொல்ல முயற்சித்திருக்கிறார்.

படத்தின் தொடக்கத்தில் இருந்தே பயணிக்கும் அப்பா – மகள் பாசம் ஒரு பக்கம் பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக இணைத்துக்கொள்ள, மறுபக்கம் மாணவிகளைச் சுற்றி நடைபெறும் மர்ம சம்பவங்கள் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் திருப்பம் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது. அதன்பிறகு கதையின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு படத்தின் இறுதி வரை தொடர்கிறது.

மொத்தத்தில், அப்பா – மகள் பாசம், கிரைம் திரில்லர், மாஸ் மற்றும் சமூக அக்கறை என பல அம்சங்களை சரியான விகிதத்தில் கலந்து கொடுத்திருக்கும் ‘இருமுடி கட்டு’, ரவி தேஜா ரசிகர்களுக்கு மட்டுமின்றி குடும்ப பார்வையாளர்களையும் கவரக்கூடிய படமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில், பாசத்திலும்… மாஸிலும்… வெற்றி பெறும் ‘இருமுடி கட்டு’