ரூ. 82 கோடியில் குழந்தை நோய் ஆராய்ச்சி மையம் கோரக்பூரில்

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலத்தில்,  உள்ள  கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த 5 நாட்களில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மருத்துவமனை நிர்வாகமானது, மருத்துவமனைக்கு தேவையான திரவ ஆக்சிஜனை, தனியார் நிறுவனத்திடம் வாங்கி வந்த நிலையில், சுமார் ரூ.69 லட்சம் வரை கடன் பாக்கி வைத்திருப்பதால் கடந்த 4ஆம் தேதி முதல் ஆக்சிஜன் விநியோகத்தை அந்த நிறுவனம் நிறுத்தி உள்ளது.

இது தொடர்பாக உ.பி. அரசு பல்வேறு நிலைகளில் விமர்சனங்களை எதிர்க்கொண்டு வருகிறது.  இதனிடையே, குழந்தைகள் உயிரிழந்த மருத்துவமனையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி.நட்டா, “கோரக்பூர் நலனுக்காக மத்திய அரசு பல தீவிர நடவடிக்கையை எடுத்துவருகிறது. மேலும், கோரக்பூர் பகுதியில் ரூ.85 கோடியில் மண்டல ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது” தெரிவித்துள்ளார்.