இந்திய தேசிய கொடி போன்று கால் மிதியடி தயாரித்து இணையதளத்தில் விற்பனைக்கு வெளியிட்ட அமேசான் நிறுவனம் தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்தது. பிரபல ஆன்-லைன் வர்த்தக இணையதளமான அமேசான் நிறுவனம் இந்திய தேசிய கொடி போன்று பல டிசைன்களில் கால் மிதியடி தயாரித்து தனது இணையதளம் மூலம் கனடா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு விட்டுள்ளது.விற்பனைக்கு வெளியான அரை மணி நேரத்தில் இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமேசான் நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் அமேசான் நிறுவனம் தயாரித்துள்ள அனைத்து பொருட்களையும் திரும்ப பெற வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் அமேசான் நிறுவனம் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.உடனடி மன்னிப்பு கேட்காவிட்டால், அமேசான் நிறுவன அதிகாரிகளுக்கு இந்திய விசா வழங்கப்படாது. ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள விசாக்களும் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதனையடுத்து அமேசான் நிறுவனம் தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்தது. இதுகுறித்து அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தியர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டதற்கு வருந்துகிறோம் என கூறப்பட்டிருந்தது.