ஜப்பானில் காகமிகஹாராவில் பெண்கள் ஆசியக்கோப்பை ஹாக்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி நடப்பு சாம்பியனான ஜப்பான் அணியை எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய 7-வது நிமிடமே இந்தியாவின் குர்ஜித் கவுர் முதல் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 9-வது நிமிடம் குர்மித் கவுர் தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார். அதன்பின் 9-வது நிமிடம் இந்திய அணியின் நவ்ஜோத் கவுர் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் முதல் பத்து நிமிட ஆட்டத்திற்குள் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றது. அடுத்து நடைபெற்ற இரண்டாவது 15 நிமிட ஆட்டத்தின் 17-வது நிமிடத்தின் ஜப்பானின் ஷிஹோ சூஜீ ஒரு கோல் அடித்தார். அடுத்து 28-வது நிமிடம் யூய் இஷிபாஷி ஜப்பான் அணிக்கு இரண்டாவது கோல் அடித்தார். இதன் மூலம் பாதி நேர ஆட்டத்தின் முடிவில் 3-2 என இந்தியா முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் இந்தியாவின் லால்ரெம்சியாமி ஒரு கோல் அடித்து இந்திய அணியின் முன்னிலையை அதிகரித்தார். அதன்பின்னர் இரு அணியினரும் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து இந்திய அணி 4-2 என வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி வருகிற 5-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்த்து விளையாட உள்ளது.