சசிகலா, தினகரனை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை; அரசியல் உள்நோக்கம் கொண்டது! எஸ்.டி.பி.ஐ. குற்றச்சாட்டு

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி இன்று(09.11.2017) செய்தியாளர்களை சென்னை, மண்ணடியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைமையகத்தில் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;

மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது இமாலய ஊழல், மோடி அரசின் தவறான நடவடிக்கையால் நாடு மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்தித்துள்ளது;

ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை மோடி அறிவித்து ஒருவருட காலம் நேற்றோடு(நவம்பர் 08, 2017) முடிந்துவிட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பட்ட துன்பங்கள், கஷ்டங்கள், இன்னல்கள், உயிரிழப்புகள் மிகவும் அதிகம். ஆனால் இந்த பாதிப்புக்களை நீக்குவதற்கு மத்திய அரசு தவறிவிட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக இந்த நாட்டினுடைய பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை கண்டுள்ளது.

இந்த நாட்டில் உள்ள ஏழைகள், உழைக்கும் மக்கள், சிறு குறு வியாபாரிகள் மிகப்பெரிய துன்பங்களை சந்தித்திருக்கும் அதே நேரத்தில் நாட்டில் குறிப்பிட்ட பணக்காரர்கள் மட்டும் பெருமளவில் லாபம் அடைந்திருக்கிறார்கள். அவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்து இருக்கிறது. அண்மையில் போர்ப்ஸ் என்ற நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி இந்நாட்டின் குறிப்பிட்ட பணக்காரர்களின் சொத்து மதிப்பு 25% உயர்ந்து இருக்கிறது.

எனவே, மோடி அரசு வெளியிட்ட இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மக்களுக்கானதல்ல; பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது. பொருளாதார நடவடிக்கைக்கு சொல்லப்பட்ட காரணங்கள் அனைத்தும் போலியானவை, உண்மைக்கு அப்பாற்பட்டது. பனமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழியப்படவில்லை. அதற்கு மாறாக நாட்டில் இருக்கும் கருப்பு பணம் வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கிறது. எனவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மிகப்பெரிய மோசடி. ஒரு மாபெரும் இமாலய ஊழல். உழைக்கும் ஏழை, எளிய மக்கள் மீது விழுந்த சம்மட்டி அடி என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த நாட்டு மக்களை வாட்டி வதைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்காக மோடியும், மோடி அரசும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் செயல்பாட்டாளர்கள் மீதான தமிழக காவல்துறையின் அத்துமீறலை வன்மையாக கண்டிக்கிறோம்;

தமிழக காவல்துறை மக்களுக்காக போராடும் செயல்பாட்டாளர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடுவது, அவர்களை கைது செய்வது, அவர்களிடத்தில் மிக கடுமையாக அத்து மீறி நடந்து கொள்வது என்ற போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அண்மையில் கார்டூனிஸ்டு பாலா மாவட்ட ஆட்சித்தலைவரையும், முதல்வரையும் விமர்சித்து கார்டூன்படம் வரைந்தார் என்பதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி அவரிடத்தில் காவல்துறை தனது அத்துமீறலை காட்டி இருக்கிறது. கைது செய்தது எதற்கு என கூறவில்லை, எங்கே கொண்டு செல்கிறோம் என்பது கூட சொல்லாமல், அழைப்பேசிகளில் யாரிடமும் பேசவிடாமல், கணினி உள்ளிட்ட பொருட்களையும் காவல்துறை எடுத்து சென்றிருக்கிறது.

அதை போன்று தொடர்ந்து கூடங்குளம் அணு உலைக்காக போராடிய போராட்டக்காரர்களுக்கான வழக்குகளில் களமாடிய நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த செம்மணி என்ற வழக்கறிஞரை காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று கொடூரமான முறையில் தாக்கி, அத்துமீறலை கையாண்டு இருக்கிறார்கள். இந்த அத்துமீறலை பணங்குடி காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோன்ஸ் உள்ளிட்ட பல அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். வழக்கறிஞர் செம்மணி கடுமையாக காயம் அடைந்துள்ளார். இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்ட காவல்துறையை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். அதை போன்று மக்களுக்காக தொடர்ந்து போராடும் தோழர் நந்தினி, தோழர் பேராசிரியர் ஜெயராமன் மீது பொய் வழக்கு போட்டு காவல்துறை அடக்கு முறைகளையும், அத்துமீறலையும் கையாண்டு வருகிறது. இத்தகைய செயல்களை காவல்துறை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக காவல்துறையை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

மோடி – கலைஞர் சந்திப்பு;

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், இந்தியாவின் மூத்த முன்னாள் முதலமைச்சருமான கலைஞர். கருணாநிதி அவர்களை நாட்டின் பிரதமர் மோடி சந்தித்தது என்பது மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே நாங்கள் பார்க்கிறோம். மோடிக்கும், பாஜாகவிற்கும் வேறு ஏதேனும் உள்நோக்கம் இருந்திருக்கலாம். கலைஞர் அவர்களை சந்திப்பதின் மூலமாக அரசியல் பரபரப்பை உருவாக்குவது. அல்லது அதிமுகவை தங்களது பிடிக்குள் கொண்டு வரும் உபாயமாகக் கூட அதனை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் இந்த சந்திப்பை திமுக ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே எடுத்துக் கொள்ளும் எனவும், பாரதிய ஜனதாவின் எதிர்ப்பு நிலையில் இருந்து நழுவாது, விளகிவிடாது என்பதை நாங்கள் கருதுகிறோம். பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுப்பத்தில் மாநிலத்தின் அனைத்து கட்சிகளும் வலிமையோடும், ஒரு மித்த கருத்தோடும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

பாஜக எதிர்ப்பாளர்கள் வீடுகளில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனையால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தோல்விகளை மறைக்க நினைக்கிறது பாஜக;

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், ஜெயா டிவி சிஇஓ விவேக் வீடு, சசிகலா, தினகரன் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமான வரித்துறையினர் சாதரனமாக சோதனை நடத்துவது என்பது கண்டிக்கப்பட வேண்டியதோ, எதிர்க்கப்பட வேண்டியதோ ஒன்றல்ல. வரி கட்டாதவர்களின் மீதும், முறையாக கணக்குளை தாக்கல் செய்யாதவர்களின் மீதும் வருமானவரித்துறையின் சோதனை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அதே நேரத்தில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து வருமான வரித்துறையை குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாடு எழுந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு தொழிலதிபர்கள் இருக்கும் வேலையில் தொடர்ந்து சசிகலா, தினகரன் ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்படும் சோதனைக்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது? தொடர்ந்து அதிமுகவை பிரித்து அக்கட்சியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கும் மத்திய அரசு அதற்கு தடையாக இருக்கும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை படியவைப்பதற்காக நடத்தப்படும் சோதனையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மத்திய அரசின் கீழ் இயங்காத வருமான வரித்துறை, தேசிய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை தற்போது மத்திய அரசின் விருப்பத்திற்கு இனங்க செயல்பட்டுவருகின்றன என்பதைதான் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிகழ்வுகள் சொல்லி வருகின்றன.

இப்போது சசிகலா, தினரனை குறிவைத்து நடைபெறுகிற வருமான வரித்துறை சோதனையொட்டி சில கேள்விகளை நான் எழுப்புகிறேன்;

இதற்கு முன்பு இதை போன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனை, கரூர் அன்புனாதன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை, சேகர் ரெட்டி வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை, முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனைகளின் முடிவுகள் என்ன?
இவற்றில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநிலத்தின் மிக முக்கிய பொறுப்புகளில் இருக்கக் கூடிய அதிகாரிகளின் வீடுகளில் நடைபெற்ற வருமான வரிச்சோதனைகளை பற்றிய முழு விவரத்தை மக்களிடம் தெரிவிக்காதது ஏன்?

எனவே, இதற்கு முன்பும் இதை போன்று நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைகள் அனைத்துமே அரசியல் ரீதியாக மிரட்டுவதற்கும், பழி வாங்குதற்குமான நடவடிக்கையாகத்தான் கருதப்படுகிறது. அந்த வகையில்தான் மத்திய அரசின் விருப்பத்திற்கு எதிராக மாநில அதிமுக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் தினரனை மிரட்டுவதற்கும், பழிவாங்குவதற்காகவும்தான் இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பதை காட்டுகிறது. இந்த வருமான வரித்துறை சோதனை என்பது தற்போது தமிழகத்திற்கு மோடி அவர்கள் சென்று வந்த பிறகு நடைபெறுகிறது என்பதையும் இணைத்து பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

அரசியல் காரணங்களுக்காக அவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள் என்ற தோற்றத்தைதான் இந்த சோதனை காட்டுகிறது. ஏற்கனவே தினகரன் தரப்பு இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக கொடுக்கப்பட்ட லஞ்சம் உள்ளிட்ட வழக்குகள் எல்லாம் போலியானவை போன்று இருப்பதாக கருதுகிறேன். இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாடின் கீழ் இருக்கும் வருமான வரித்துறை போன்ற துறைகளை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தி அத்துறைகள் மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பகத்தன்மையை இழக்கச்செய்து இருக்கும் மோடி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

தினகரனை பழிவாங்குகிறோம் என்பதை தாண்டி கருப்பு பணத்தை ஒழிக்கிறோம் என்ற நோக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 08ந் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்ட நேற்றைய தினத்தில் அந்த அறிவிப்பு தோல்வியடைந்ததால் நாடே கொந்தளித்து இருக்கும் இந்நிலையில் பாஜக இது போன்ற செயல்களால் கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிக்கிறோம் என்பதை காட்டுவதற்காக நடத்தப்பட்ட சோதனையாகவும் நாங்கள் இதை கருதுகிறோம். எனவே இத்தகைய நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றிய காவல்துறையின் பணி மகத்தானது;

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி இருக்கும் நிலையில் கடந்த ஒருவாரமாக பெய்த மழையால் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளும், சாலைகளும் அதை போன்று நாகை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளும் வெள்ள சேத பாதிப்புகளை சந்தித்திருக்கின்றன.

இது கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற வெள்ள சேதத்தில் இருந்து தமிழக அரசு படிப்பினை பெற்று தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததையே தற்போது நடைபெற்றிருக்கும் வெள்ள சேத பாதிப்புகள் காட்டுகின்றன. சென்னையில் உள்ள அனைத்து சாலைகளிலும் மழைநீர் தேங்கி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தற்போது மழை இல்லாத நேரத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சேதமடைந்துள்ள சாலைகளை செப்பனிடுவதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளும் இந்த நேரத்தில்

சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றிய காவல்துறையின் பணி மகத்தானது. அதற்காக செயல்பட்ட அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தீயனைப்புத்துறை அதிகாரிகள், பிற அரசியல் கட்சி மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த அனைவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இச்சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்ஸா, ரத்தினம், பொருளாளர் முகைதீன், ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி, வட சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால் ஆகியோர் உடணிருந்தார்.