தஞ்சாவூர் விபத்தில் உயிர்இழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு நிதிஉதவி

 

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், வல்லம் சரகம் மற்றும் கிராமம், ஆலக்குடி மேம்பாலம் அருகே திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை 67-ல், 14.7.2017 அன்று திருச்சியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேரூந்தும், இரும்பு கம்பி ஏற்றி வந்த சரக்கு மினி லாரியும் மோதிய விபத்தில், பேரூந்தில் பயணம் செய்த ஐந்து நபர்களும், மினி லாரி ஓட்டுநர் உட்பட ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயும், இரண்டு நபர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும், இருவர் சிகிச்சைக்கு பலனின்றியும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் 23 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க தஞ்சாவூர் மாவட்டநிருவாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும், வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்; காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/-ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.