நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் வாடிக்கையாளர்களிடம் பண மோசடிப் புகார்கள் பதிவு செய்யப்பட்ட விபரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் 455 வழக்குகளுடன் தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி முதலிடம் பிடித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கி 429 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி 244 வழக்குகளுடன் மூன்றாம் இடமும், எச்.டி.எப்.சி வங்கி 237 வழக்குகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளது.
பல முன்னணி வங்கிகளான ஆக்சிஸ் வங்கி 189 மோசடி வழக்குகளையும், பரோடா வங்கி 176 வழக்குகளையும், சிட்டி வங்கி 150 வழக்குகளையும் பட்டியலில் கொண்டுள்ளது. பணமதிப்பு அடிப்படையில் பார்க்கும் போது எஸ்.பி.ஐ வங்கி சுமார் 2236 கோடி ரூபாய் மோசடியில் சம்மந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடியில் ஈடுபட்ட வங்கிப் பணியாளர்களின் பெயர்ப்பட்டியலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.