இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு ரூ.60 கோடி வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் டில்லியில் சிக்கிய தரகர் சுகேஷ் சந்திரா அளித்த தகவலின்படி போலீசார் தினகரன் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தினகரனின் மொபைல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஏற்கனவே 2 நாட்களாக, தலா 10 மணி நேரம் தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் போது பெரும்பாலான கேள்விகளுக்கு தினகரன் ஒரே வரியில் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 3வது நாளாக இன்றும் (ஏப்ரல் 24) விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று நடத்தப்பட்ட விசாரணையின் போது தனக்கு சுகேசை முன்பே தெரியும் என தினகரன் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு வரை சுகேசை தனக்கு யார் என்றே தெரியாது என தினகரன் கூறி வந்தார். ஆனால் நேற்று நடந்த விசாரணையின் போது, ‘சுகேசை எனக்கு முன்பே தெரியும். அவரை ஐகோர்ட் நீதிபதி என நினைத்து பேசினேன்’ என தினகரன் கூறி உள்ளதாக கூறப்படுகிறது.
சுகேசுடன் தனக்கு தொடர்பு இருப்பதை தினகரன் ஒப்புக் கொண்டுள்ளதால், தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேசை அளித்துள்ள வாக்குமூலம் உண்மையாக இருக்கும் என்ற முடிவுக்கு டில்லி போலீஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தினகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.