கதையின் நாயகனான துல்கர் சல்மான், சூதாட்டத்தின் மீது தீராத மோகம் கொண்டவர். தனது பழக்கத்தால் ஏராளமான கடனில் சிக்கிக் கொள்ளும் அவர், கடன் கொடுத்தவர்களிடமிருந்து தப்பிச் செல்லும்போது எதிர்பாராத விபத்தில் சிக்குகிறார். அந்த விபத்தில் தனது வலது கையை இழக்கிறார்.
அதன் பின்னர் அவருக்கு பொருத்தப்படும் மாற்றுக் கைதான் கதையின் முக்கிய திருப்பமாகிறது. கிரிக்கெட் வீரரான ஆண்டனி வர்கீஸின் கை துல்கருக்கு பொருத்தப்படுகிறது. அதன் பிறகு அவரது வாழ்க்கையில் நிகழும் விசித்திரமான சம்பவங்கள், அமானுஷ்ய அனுபவங்கள் என கதை வேறு ஒரு தளத்திற்கு செல்கிறது.
இந்த அமானுஷ்யங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? அந்தக் கைக்கும் சூதாட்டத்துக்கும் இருக்கும் தொடர்பு என்ன? அந்தப் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய சூதாட்டக்காரர் யார்? அவரைத் தேடி கண்டுபிடிக்கும் துல்கர் சல்மான் இறுதியில் என்ன செய்கிறார்? என்பதற்கான பதில்கள்தான் படத்தின் மீதிக் கதை.
படம் முழுவதையும் தனது திரை இருப்பால் தாங்கி நிற்கிறார் துல்கர் சல்மான். கதாபாத்திரத்தின் பணக்காரத்தனமான உடல்மொழியும், ஸ்டைலான மேனரிசங்களும் அவரது நடிப்பில் சிறப்பாக வெளிப்படுகின்றன. ஆக்ஷன் காட்சிகளிலும் தனது எனர்ஜியை குறைக்காமல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.
கயாடு லோஹர் அழகிலும் நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். அவரது கதாபாத்திரம் வரும் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
வில்லன் கதாபாத்திரத்தில் வரும் மிஷ்கின், வழக்கமான வில்லன் பாணியிலிருந்து விலகி தனது தனித்துவமான நடிப்பால் மிரட்டுகிறார். ஆண்டனி வர்கீஸ் தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். பிற்பாதியில் சம்யுக்தா விஸ்வநாதன் தனது நடிப்பால் கவனம் பெறுகிறார். வினய் ஃபோர்ட் ஓகே ரகம். கதிர் கதாபாத்திரத்திற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித், படத்தின் பிரம்மாண்டத்தை ஒவ்வொரு காட்சியிலும் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் மற்றும் முக்கியமான காட்சிகளில் அவரது கேமரா ஒர்க் படத்திற்கு கூடுதல் பலம்.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய், கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு பின்னணி இசைத் தீம்களை அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது. காட்சிகளின் தாக்கத்தை அதிகரிப்பதில் பின்னணி இசை முக்கிய பங்கு வகிக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகத்தில் அமைந்துள்ளன.
புதிய திருப்பங்களுக்கான எதிர்பார்ப்புடன் செல்லும் ரசிகர்களுக்கு இது சிறிய ஏமாற்றத்தை தரலாம்.
அதே நேரத்தில், ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் படக்குழு எடுத்திருக்கும் உழைப்பு திரையில் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக கிரிக்கெட்டை வெறும் விளையாட்டாக பார்க்காமல், அதனுடன் இணைந்திருக்கும் உணர்வுகளை கதைக்குள் கொண்டு வந்திருக்கும் விதம் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் முயற்சிக்கு பலம் சேர்க்கிறது.
திரைக்கதையை சஜீர் பாபா, பிலால் மொய்து மற்றும் இஸ்மாயில் அபூபக்கர் இணைந்து எழுதியுள்ளனர். கதையின் மையக்கரு சுவாரஸ்யமாக இருந்தாலும், திரைக்கதையில் இன்னும் சில எதிர்பாராத திருப்பங்களையும், வலுவான காட்சிகளையும் சேர்த்திருந்தால் படத்தின் தாக்கம் அதிகரித்திருக்கும்.
மொத்தத்தில், சூதாட்டம், அமானுஷ்யம், கிரிக்கெட், ஆக்ஷன் என பல அம்சங்களை ஒன்றாக இணைத்து பயணிக்கும் திரைப்படமாக இது இருக்கிறது. துல்கர் சல்மானின் ஸ்டைலான நடிப்பு, மிஷ்கினின் வில்லத்தனம், பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை ஆகியவை படத்தை ஒரு முறை பார்க்கக்கூடிய அனுபவமாக மாற்றுகின்றன.
துல்கர் சல்மானின் திரை வசீகரம் படத்தை ரசிக்க வைக்கிறது.
ரேட்டிங் 3/5


