ஹே சினாமிகா குழுவை விட்டு பிரிய மனமில்லாமல் இறுதிநாள் படப்பிடிப்பின் போது அழுதேன்: அதிதி ராவ் ஹைதாரி

துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஹே சினாமிகா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் மார்ச் 3-ம் தேதி வெளியாக உள்ளது.

ஜியோ ஸ்டுடியோஸ் க்ளோபல் ஒன் ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் முன்னணி நடன இயக்குநர் பிருந்தா ‘மாஸ்டர்’ இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஹே சினாமிகாவில் பணியாற்றிய அனுபவத்தை குறித்து அதிதி அளித்த நேர்காணல்.

இந்தப் படத்தை நீங்கள் எதனால் ஒப்புக்கொண்டீர்கள்?

பிருந்தா மாஸ்டரை எனக்கு மிகவும் பிடிக்கும், அவருடன் பணியாற்றுவதை நான் மிகவும் விரும்புகிறேன். அவர் இயக்கும் முதல் படத்தில் நானும் துல்கரும் தான் நடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதற்கு முன் நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் இருந்து இது மிகவும் வித்தியாசமானது.

துல்கர் சல்மானுடன் பணிபுரிந்தது எப்படி இருந்தது?

நானும் துல்கரும் இந்தப் படத்திற்கு முன்பே நண்பர்கள். ஒன்றாக பணியாற்றுவது எங்களுக்கு உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. பிருந்தா மாஸ்டர் மீது எங்கள் இருவருக்கும் அலாதியான மரியாதை உள்ளது.

இந்தப் படத்தில் உங்கள் பாத்திரம் எவ்வளவு வித்தியாசமானது?

ஹே சினாமிகா படத்தில் நான் இதுவரை நடித்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
ஒரு மனிதருக்குள் பல்வேறு சுபாவங்கள் உள்ளது. எனது வேடிக்கையான பக்கத்தை பற்றி எனக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அறிவார்கள். எனது இந்த பக்கத்தை எங்களது நடன ஒத்திகையின் போது பிருந்தா மாஸ்டர் கவனித்திருப்பார் என்று நினைக்கிறேன். அதனால் தான் இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்ததாக நினைக்கிறேன்.
எனது அந்த மறுபக்கத்தை இந்த படத்தில் ரசிகர்கள் காணலாம்.

ஹே சினாமிகாவில் நகைச்சுவை காட்சிகளில் நடிப்பது எப்படி இருந்தது?

நான் இதுவரை இலகுவான கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. இந்தப் படத்தை பொருத்தவரை திரைக்கதை, சூழ்நிலை மற்றும் அதை எழுதிய விதத்தில் பெரும்பாலான நகைச்சுவை அமைந்துள்ளது. மக்களை சிரிக்க வைப்பது மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்றாகும். நிறைய திறமையான நடிகர்கள் எங்களுடன் பணியாற்றியுள்ளனர். எங்களது வேலையை இது எளிதாக்கியது.

ஒரு இயக்குநராக பிருந்தாவுக்கு என்ன மதிப்பீடு தருவீர்கள்?

ஒரு இயக்குநராக பிருந்தா மிகவும் திறமையானவர். படத்தை இயக்கும் போது அவர் நடன இயக்குநராக செயல்படவில்லை. இரண்டு துறைகளையும் தனித்தனியாக அவர் கவனித்துக் கொண்டார். நடிகர்களை எப்படி கையாள்வது என்பதும் அவருக்கு இயல்பாகவே தெரிந்திருந்தது. உதாரணமாக, நான் ஒத்திகைகளை விரும்புவேன் என்று தெரிந்து அதற்கேற்ப திட்டமிட்டுவார். படப்பிடிப்பில் உற்சாகமான குழந்தையைப் போலவே அவர் இருப்பார். ஒவ்வொரு காட்சியையும் பிருந்தா ரசித்து இயக்குவார். அவருக்கு என்ன வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அதே வேளையில் எங்களது கருத்துகளுக்கும் மதிப்பளித்தார்.

காஜல் அகர்வாலுடன் பணிபுரிந்தது பற்றி…

காஜலுக்கு அனுபவம் வாய்ந்த நடிகை. இப்படத்தில் அவருடன் எனக்கு அதிக காட்சிகள் இல்லை. சில முக்கிய காட்சிகளில் மட்டுமே இருவரும் இணைந்து நடித்தோம். அவரது வருகை ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்தது. எங்கள் அனைவருடனும் எளிதில் பழகியதற்காக காஜலை நான் பாராட்ட வேண்டும். மொழித் தடைகள் இருந்தபோதிலும் சிறந்த முறையில் அவர் பணியாற்றுவது பாராட்டுக்குரியது.

படப்பிடிப்பின் சில சுவாரசியமான தருணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்…

படப்பிடிப்பின் போது பல சுவாரஸ்யமான அனுபவங்கள் எங்களுக்கு ஏற்பட்டது. ஒரு தடவை அனைவரும் புயலில் சிக்கினோம். நான் பீதியடைந்து அழ ஆரம்பித்ததை துல்கர் கிண்டல் செய்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். கொவிட் நோயின் ஆரம்ப கட்டத்தில், நாங்கள் ரசம் குடித்துவிட்டு படப்பிடிப்பைத் தொடர்ந்தோம். பின்னர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது, ஆனால் தளர்வுகள் செய்யப்பட்டவுடன் அதிக ஆற்றலுடன் நாங்கள் திரும்பினோம். இந்த படப்பிடிப்பு முடிவடைவதை நான் விரும்பவில்லை, படப்பிடிப்பின் கடைசி நாளில் அழுதேன்.

பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் மல்டி-ஸ்டாரர்கள் பற்றி உங்கள் பார்வை என்ன?

என்னைப் பொறுத்தவரை மல்டிஸ்டாரர் செய்வதில் ஈகோவோ, பாதுகாப்பின்மையோ இல்லை. நீங்கள் நம்பும் நபர்களுடன் பணிபுரியும் போது, ​​உங்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படாது. நான் ஏன் ஒரு படம் செய்கிறேன், அதில் எனக்கு என்ன பங்கு இருக்கிறது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். என்னைப் பொருத்தவரை பார்வையாளர்களைக் கவருவது முக்கியம். ஒரு குறிப்பிட்ட வகை திரைப்படத்துடன் என்னை தொடர்பு படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லை என்றாலும், காதல் கதைகள் செய்வதை விரும்புகிறேன். ஒரு காதல் கதையில் வித்தியாசமான போக்கு அல்லது பயணம் இருக்கும்போது, ​​அது எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும்.

மக்கள் உங்களை எப்படி நினைவில் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

நான் சினிமாவை மாயாஜாலமாகவும் காலத்தை கடந்ததாகவும் பார்க்கிறேன். நான் மதிக்கும் மற்றும் ரசிக்கும் இயக்குநர்களுடன் பணியாற்றுவது எனக்கு முக்கியம். காலம் தாண்டிய, அதே சமயம் காலத்திற்கு பொருத்தமான ஒருவராக இருக்கவே நான் விரும்புகிறேன்.