ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’

ஒவ்வொரு நபரின் வாழ்விலும் ராசி, நட்சத்திரங்கள் பிரிக்க முடியாத ஒரு காரணியாக இருக்கின்றன. இது ஒரு நம்பிக்கையாகவோ அல்லது வெறுமனே வேடிக்கையாகவோ ஜோதிடத்தின் மூலம் வரும் நாட்கள், வாரங்கள் அல்லது ஆண்டுகள் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று எல்லோரும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். குறிப்பாக தமிழில் உள்ள ராசிகளிலேயே ‘தனுசு ராசி’ தனித்தன்மை கொண்டதாகவும், உடனடியாக அனைவரையும் ஈர்க்கும் விஷயமாகவும் இருக்கிறது. அதை மையமாக வைத்து ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தனுசு ராசி நேயர்களே என்ற படத்தை இயக்குகிறார் சஞ்சய் பாரதி.

தலைப்பின் முக்கியத்துவம் மற்றும் படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, “நம்மில் ஒவ்வொருவருமே நம்முடைய ராசியை வைத்து வரும் நாட்கள் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். பத்திரிகைகளிலோ அல்லது காலையில் தொலைக்காட்சியிலோ ஆர்வத்தோடு ராசி பலனை பார்க்கிறோம். ஆத்திகரோ, நாத்திரகரோ, கடுமையாக நம்பிக்கை அல்லது வேடிக்கையாகவாவது அதை கவனிக்கிறார்கள். ‘தனுசு ராசி நேயர்களே’ என்று பெயரிட காரணம், அது மற்ற ராசிகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக கவனத்தை ஈர்க்கிறது. கூடுதலாக, நாயகன் ஹரீஷ் கல்யாண் இந்த குறிப்பிட்ட ராசிக்காரர் தான். இந்த ராசிக்கான அடையாளம் ஒரு வில் அம்பு வைத்திருப்பவர். இது லட்சிய நோக்கத்ததை குறிக்கிறது. இதேபோல், இந்த படத்தில் உள்ள ஹீரோ குறிக்கோளுடன் இருப்பவர், அவருடைய வாழ்க்கையில் நடப்பவை தொடர்ச்சியான சம்பவங்களின் மூலம் வெளிப்படுகிறது. எங்கள் படத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்க ஒப்புக் கொண்டதை விடவும், வேறுபட்ட கதையம்சம் உள்ள திரைக்கதைகளை அவர் தேர்ந்தெடுப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது முந்தைய படங்கள் ரோம்-காம் மற்றும் ஆழ்ந்த காதல் கதையை அடிப்படையாகக் கொண்டவை. அவர் நினைத்திருந்தால் அது போன்ற படங்களில் நடித்து வெற்றியை கொடுத்திருக்க முடியும். ஆனாலும், இது போன்ற வித்தியாசமான கதைகளில் நடிக்க முயற்சி செய்கிறார். ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள், அவர்களை இறுதி செய்து வருகிறோம். என்னுடைய இந்த ஸ்கிரிப்ட்டை உறுதியாக நம்பி, அதை திரைப்படமாக்க எனக்கு உதவியாக இருக்கும் ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சாருக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.