சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற நீதியரசர் திரு கே.என்.பாஷா அவர்கள் தலைமையில் கடந்த 10.06.2018 அன்று தேர்தல் நடைபெற்றது. 25 நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு 13.06.2018 அன்று ஓய்வுபெற்ற நீதியரசர் கே.என்.பாஷா அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் முதல் செயற்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் திரு ஜாக்குவார் தங்கம் அவர்கள் தலைமையில் 13.06.2018 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ்க்கண்ட சில முக்கியமான தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. சங்கத்தில் நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து சங்க வளர்ச்சிக்கு செயல்படுவது.
2. தலைவர் உட்பட எவரும் தன்னிச்சையாக செயல்படக் கூடாது எனவும் சங்க விதிகளின்படி செயற்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களின் முடிவின்படி செயல்படுவது.
3. சங்கத்தில் பட நிறுவனம் பதிவு படத்தலைப்பு பதிவு மற்றும் புதுப்பித்தல்களுக்கு பணமாக எந்த பரிமாற்றமும் செய்யக்கூடாது எனவும் வரைவோலை (DD) அல்லது swiping எந்திரம் மூலம் கார்டு swipe செய்து பண பரிமாற்றம் செய்வது எனவும்
4. படத்தலைப்பு பதிவுகள் வெளிப்படைத் தன்மை கொண்ட முறையில் ஆன்லைன் முன்பதிவு மூலம் செய்வது எனவும்
5. கடந்த மூன்று ஆண்டுகளில் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்து செயற்குழுவில் ஒப்புதலைப் பெற்று பொதுக்குழுவை கூட்டி சங்கத்தை புதுப்பிக்கத் தக்க நடவடிக்கை எடுப்பது எனவும் இது போன்ற முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும் அவரவர் தங்கள் பொறுப்புகளை ஏற்று செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் பொருளாளர் மற்றும் செயலாளர் அவர்கள் தங்களின் அன்றாட பொறுப்புக்களை செயல்படுத்த அவர்கள் தொடர்புடைய சங்கத்தின் எந்த கோப்புகளும் சக ஊழியர்களால் இன்று வரை வழங்கப்படவில்லை. இந்த ஊழியர்கள் எல்லோரும் தற்போதைய தலைவரும் கடந்த 4 ஆண்டுகால செயலாளருமான ஜாகுவார் தங்கம் அவர்களால் பணியில் அமர்த்தப்பட்டவர்கள். அவர்கள் எவரும் மற்ற நிர்வாகிகளை மதித்து ஒத்துழைக்கவில்லை. இவர்கள் மூலமாகவே ஜாக்குவார் தங்கம் சில நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் பொய் புகார்களை அளிக்க சொன்னார். காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் இதனை விசாரித்து இவைகள் பொய் புகார்கள் என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
ஜாகுவார் தங்கம் சங்க விதிகளுக்கு முரணாக பொருளாளர் நந்தகோபால் சிட்டி அவர்களையும் மற்றும் செயலாளர்கள் பி.துரைசாமி, எம்.ஜம்பு ஆகியோரை தன்னிச்சையாக எந்தவித தீர்மானமின்றி நீக்கி கில்டு சங்க அறிவிப்பு பலகையில் விளம்பரப்படுத்தி இந்த மூவரையும் சங்கத்தின் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார். மேலும், சங்க லெட்டர்பேடிலும் மையால் அடித்து பயன்படுத்துகிறார். இதனை நீதிமன்றம் மனுவில் குறிப்பிட வில்லை. பேர் அடிக்கப்பட்ட சங்கத்தின் லெட்டர்பேடிலும் புதிதாக நியமிக்கப்பட்ட பெயர்களையும் பதிக்கவில்லை. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் இரு சாராரும் தேர்தலில் வென்ற அதே நிலையில் தொடர வேண்டும் (Status Quo) என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது (OA.No.707 and 709/2018, 5822/2018, CS No.512/2018 Dt.01.08.2018). இதன் மீது ஜாக்குவார் தங்கம் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவின் மீது நிர்வாகிகளுக்கு எதிராக எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் துரைசாமி, ஜம்பு, பொருளாளர் நந்தகோபால்செட்டி ஆகியோரை நீக்கி விட்டதாகவும், அவர்களுக்கு பதிலாக வேறு 3 புதியவர்களை நியமித்து கொண்டதாகவும், சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகை மற்றும் ஊடக சந்திப்பில் கூறியுள்ளார்.
இதில் கே.நந்தகோபால் செட்டி பொருளாளராக கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாகுவார் தங்கம் அவர்களுடன் செயல்பட்டு வந்தார். இதில், கடந்த 4 ஆண்டுகளில் ஜாகுவார் தங்கம் செயலாளராக பொருளாளரான கே.நந்த கோபால் செட்டியுடன் செயல்பட்டார். அப்பொழுதெல்லாம் அவர் மீது எந்த குற்றமும் சுமத்தாமல் தற்பொழுது அவருக்கு எதிரணியில் செயல்படும் ஒரே காரணத்திற்காக அவர் மீது பழி சுமத்தி அவர்கள் நற்பெயருக்கு களங்கம் கற்பித்து வருகிறார். மேலும் தனக்கு எதிரானவர்கள் மீது சங்கத்திற்கு தொடர்பில்லாத தனிப்பட்ட பிரச்சினைகள் பற்றி தனக்கு வேண்டியவர்கள் மூலமாக தொடர்புடையவர்களிடம் எந்த விளக்கமும் கேட்காமல் வீண் பழி சுமத்துகிறார்.
2013-2015 ஆம் ஆண்டுகளில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற நிர்வாகிகளை சங்கத்தை விட்டு வெளியேற்றி விட்டு கடந்த 4 ஆண்டுகளாக சங்க அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு செயல்பட்டபோது சங்க வரவு செலவு கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் முடித்து, பொதுக்குழுவைக் கூட்டி ஒப்புதல் பெற்று சங்க பதிவாளரிடம் சமர்ப்பித்திருந்தால் சங்க பதிவு ரத்து செய்யப்படும் என்ற இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்காது. இதுபோன்ற தவறை நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து விட்டு ஏதோ இன்றைக்குத்தான் பொதுக்குழுவை கூட்ட முடியாதது போல் ஒரு மாயை நாடகம் ஆடுகிறார். எனவே. சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் உரிமைகளை நிலைநாட்டவும், சங்கத்தின் பதிவு ரத்து குறித்து சிக்கல்களை தீர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மீது சங்க உறுப்பினர்கள் கொண்ட நம்பிக்கையையும், சங்க மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியும், தொடர்ந்து சங்க விதிகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டிருக்கும் தலைவர் ஜாகுவார் தங்கத்தின் தவறான செயல்களை தடுக்க வேண்டியும், உறுப்பினர்களின் நிறுவன பதிவு மற்றும் புதுப்பித்தல், படத்தலைப்பு பதிவு மற்றும் புதுப்பித்தல்களில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி கொண்டிருப்பதை தடுத்து, அவைகளை வெளிப்படைத்தன்மை ஆக்குவதற்கும் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் பலர் நேரிடையாக எங்களிடம் கேட்டு கொண்டதினால் அவர்களின் குறைகளைக் களையும் பொருட்டு நேரடியாக சங்க அலுவலகத்திற்கு வந்து தொடர்புடைய சக ஊழியர்களை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கவும், அதோடு மட்டுமல்லாமல், சங்கத்தின் உயிர்நாடி பிரச்சனையான சங்க பதிவு ரத்து குறித்து தலைவர் அவர்கள் எங்களுக்கு எந்த தகவல்களையும் முறைப்படி தெரிவிக்காமலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் செயற்குழுக் கூட்டத்தை கூட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்களுக்கு தலைவர் அறிவுறுத்தாமல் இருப்பதாலும், சங்க நிர்வாகிகள் ஆன நாங்களும் சில உறுப்பினர்களும் தலைவரை சந்தித்து ஆலோசித்துக் நல்ல முடிவெடுப்பதற்கும் சங்க அலுவலகத்தில் கூடியுள்ளோம்.