பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘லெனின் பாண்டியன்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா

T.G. தியாகராஜன் வழங்க, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கியுள்ள திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’. தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் மணல் கொள்ளையை மையமாகக் கொண்டு எளிய மக்களின் உரிமைகள் மற்றும் மண்ணின் வாழ்வியலைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ளது.

செப்டம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ‘லெனின் பாண்டியன்’ சமூக மதிப்புகளைப் பேசும் வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ளதாகவும், தர்ஷன் கணேசனுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரும் என்றும் வாழ்த்தினார். மேலும் இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பதாகவும், கங்கை அமரன் மற்றும் ரோஜாவின் நடிப்பைப் பாராட்டியும் பேசினார்.

தயாரிப்பாளர் அம்மா சிவா, இயக்குநர் பாலச்சந்திரனின் எழுத்து மற்றும் வசனங்களைப் பாராட்டியதுடன், கங்கை அமரன் இப்படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பதாகவும், தர்ஷன் கணேசனுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இயக்குநர்கள் பி. வாசு, கண்ணன், பத்ரி, வெங்கட் பிரபு உள்ளிட்டோரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். வெங்கட் பிரபு பேசுகையில், தனது தந்தை கங்கை அமரன் இப்படத்தில் மிகவும் இயல்பாக நடித்திருப்பதாகவும், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையை இயக்குநர் பாலச்சந்திரன் அழுத்தமாக கையாண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இசையமைப்பாளர் இளையராஜா, தர்ஷன் கணேசனின் நடிப்பைப் பாராட்டியதுடன், சிவாஜி கணேசனின் நடிப்பு பாரம்பரியத்தை அவர் காப்பாற்றும் வகையில் சிறப்பாக நடித்துள்ளதாக வாழ்த்தினார்.

நடிகர் தர்ஷன் கணேசன் தனது முதல் பட வாய்ப்பை வழங்கிய சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், இயக்குநர் பாலச்சந்திரனுக்கும், குடும்பத்தினருக்கும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.

நடிகை ரோஜா தனது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘லெனின் பாண்டியன்’ மூலம் மீண்டும் திரையில் அறிமுகமாகியிருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இயக்குநர் பாலச்சந்திரனின் கதை சொல்லும் விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் தெரிவித்தார். தர்ஷன் கணேசனின் எளிமை மற்றும் இயல்பான நடிப்பையும் அவர் பாராட்டினார்.

கங்கை அமரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகராக நடிக்கும் வாய்ப்பை வழங்கிய சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார். நாயகி ஸ்ரித்தா ராவும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து, அனைவரும் திரையரங்கில் படத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

75 வயது முதியவர் ஒருவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பதன் பின்னணி என்ன? என்ற கேள்வியை மையமாகக் கொண்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.