ஜி.டி. நாயுடுவின் சாதனைகளை உலகறியச் செய்யும் ‘ஜி.டி.என்.’ – பிரம்மாண்ட ப்ரீ ரிலீஸ் நிகழ்வு

டிரைகலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மாதவன், சத்யராஜ், துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நிகழ்வில் பேசிய ஜி.டி. ராஜ்குமார், ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்படம் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார். படத்தில் சுமார் 70 சதவீதம் உண்மை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.

நடிகை அதிதி பாலன், தனது ‘பத்மாவதி’ கதாபாத்திரத்தின் வழியாகவே ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைக் கதை விரிவடைவதாகவும், இப்படத்தின் மூலம் அவரைப் பற்றி பல புதிய விஷயங்களை தெரிந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

துஷாரா விஜயன், இப்படத்தில் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் தனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது எனக் குறிப்பிட்டார்.

நடிகர் சத்யராஜ் பேசுகையில், ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஆச்சரியமளிப்பதாகவும், ஒரு கமர்ஷியல் படத்திற்குத் தேவையான அம்சங்களைத் தாண்டி பல சுவாரஸ்யமான விஷயங்கள் இப்படத்தில் இருப்பதாகவும் கூறினார். மேலும், மாதவனின் சினிமா பயணத்தில் ‘ஜி.டி.என்.’ முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார், ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைப் பற்றி ஆய்வு செய்தபோது கிடைத்த ஒவ்வொரு சம்பவமும் சினிமாவுக்கான காட்சியாகத் தோன்றியதாகவும், அவரது கண்டுபிடிப்புகள் சாதாரண மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

நடிகர் மாதவன், ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பொறுப்புணர்வுடன் இப்படத்தில் பணியாற்றியதாகக் கூறினார். ஜி.டி. நாயுடு குறித்து மாணவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே படத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்றும் தெரிவித்தார்.

தயாரிப்பாளர்கள் வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலன், ‘ராக்கெட்டரி’ படத்தைத் தொடர்ந்து ‘ஜி.டி.என்.’ திரைப்படத்திலும் மாதவனுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், ரசிகர்கள் இப்படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை, கண்டுபிடிப்புகள் மற்றும் சாதனைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்.’ ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.