தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைய அளவுக்கு இல்லாத காலகட்டத்தில், தனது சிந்தனையாலும் செயல்பாட்டாலும் தொழில் மற்றும் கண்டுபிடிப்புத் துறையில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய கோவை மண்ணின் பெருமை ஜி.டி.நாயுடு. அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அவரது சாதனைகளுடன் சேர்த்து அவர் எதிர்கொண்ட தடைகளையும் மோதல்களையும் கமர்சியல் சினிமாவின் வழியில் சொல்ல முயற்சிக்கிறது.
1914-ஆம் ஆண்டு இளைஞனாக இருக்கும் மாதவனுக்கு, வெள்ளைக்காரர் ஒருவரிடம் இருக்கும் மோட்டார் சைக்கிள் மீது ஆர்வம் ஏற்படுகிறது. அதை எப்படியாவது வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் முயற்சி செய்து, இறுதியில் அதை சொந்தமாக்குகிறார்.
அதோடு நின்றுவிடாமல், அந்த வாகனத்தின் இயக்க முறையைத் தானே கற்றுக்கொண்டு, இயந்திரங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் மீது தனது கவனத்தைத் திருப்புகிறார். அங்கிருந்து தொடங்குகிறது அவரது சாதனைப் பயணம்.
ஆனால் ஒரு மனிதனின் திறமையும் வளர்ச்சியும் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருவதில்லை. நாயுடுவின் முன்னேற்றத்துக்கு எதிராக உருவாகும் சூழ்ச்சிகளும் தடைகளும் அவரது பயணத்தை பலமுறை பின்னுக்குத் தள்ளுகின்றன. ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும் மீண்டும் எழுந்து தனது இலக்கை நோக்கி பயணிக்கும் நாயுடுவின் வாழ்க்கையே படத்தின் மையக்கரு.
ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் ஆர்.மாதவன், அந்த காலகட்டத்திற்குள் தன்னை பொருத்திக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அவரது உடல்மொழி, தோற்றம், கதாபாத்திரத்தின் மீதான அணுகுமுறை ஆகியவை பல இடங்களில் கவனிக்க வைக்கின்றன. அதே நேரத்தில் சில காட்சிகளில் நடிப்பு சற்று அதிகமாகத் தெரிகிறது.
பிரியாமணிக்கு படத்தில் பெரிய இடம் இல்லை என்றாலும், கிடைத்த காட்சிகளில் தனது அனுபவத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
துஷாரா விஜயன் தனது ரங்கநாயகி கதாபாத்திரத்தை இயல்பாக கையாண்டுள்ளார். சத்யராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நினைவில் நிற்கும் கதாபாத்திரத்தில் தோன்றி, தனது அனுபவமான நடிப்பால் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறார்.
ஜெயராம், வினய் ராய், அதிதி பாலன், கருணாகரன் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளனர்.
படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று பின்னணி இசை. கோவிந்த் வசந்தாவின் இசை, கதையின் காலகட்டத்திற்கும் உணர்வுக்கும் ஏற்ற வகையில் பயணிக்கிறது. குறிப்பாக முக்கியமான தருணங்களில் பின்னணி இசை காட்சிகளின் தாக்கத்தை அதிகரிக்கிறது.
அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவு, பழைய காலகட்டத்தை திரையில் மீண்டும் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காட்சிகளில் இருக்கும் பிரம்மாண்டமும் காலகட்ட உணர்வும் படத்தின் தரத்தை உயர்த்துகின்றன.
மாதவன் உள்ளிட்டோர் ஜெர்மனியில் ஹிட்லரை சந்திக்கும் காட்சியில் AI மற்றும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முழுமையாக குறை சொல்ல முடியாத அளவுக்கு அந்த காட்சிகள் ஓரளவு சிறப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளன.
ஜி.டி.நாயுடு போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருவரின் வாழ்க்கையை திரைப்படமாக மாற்றுவது சாதாரணமான விஷயம் அல்ல. அவரது கண்டுபிடிப்புகள், சாதனைகள், சிந்தனைகள் என ஏராளமான விஷயங்கள் இருக்கும் நிலையில், அவற்றை முழுமையாக திரையில் பதிவு செய்தால் படம் ஆவணப்பட பாணிக்கு நகர்ந்துவிடும் வாய்ப்பு அதிகம்.
அந்த சிக்கலைத் தவிர்த்து, ரசிகர்களுக்கான கமர்சியல் சினிமாவாக படத்தை உருவாக்க இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் முயன்றிருக்கிறார்.
ஆனால் நாயுடுவின் கண்டுபிடிப்புகள் மற்றும் சாதனைகளைக் காட்டிலும், அவருக்கு எதிராக நடைபெற்ற தடைகள் மற்றும் சூழ்ச்சிகளுக்கு திரைக்கதையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஜி.டி.நாயுடுவின் அறிவியல் சிந்தனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சில இடங்களில் நிறைவேறாமல் போகிறது.
அதே நேரத்தில், ஒரு திறமைசாலியின் வளர்ச்சியைத் தடுக்க வெளியில் இருந்தும், நம்மைச் சுற்றியிருந்தும் உருவான எதிர்ப்புகளை பதிவு செய்திருப்பது படத்தின் முக்கியமான அம்சமாக இருக்கிறது.
வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த ஒரு தமிழரின் வாழ்க்கையை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது. ஆவணப்படமாக மாறிவிடக்கூடிய கதையை, நடிகர்கள், உணர்வுகள், மோதல்கள் மற்றும் கமர்சியல் அம்சங்களுடன் ரசிகர்களுக்குக் கொண்டு செல்ல இயக்குநர் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது.
ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்து இதுவரை அறிந்திராதவர்களுக்கு இப்படம் ஒரு நல்ல அறிமுகமாக அமையும். அவரது வாழ்க்கையைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தையும் படம் உருவாக்குகிறது.
மொத்தத்தில், தடைகள் எத்தனை வந்தாலும் கண்டுபிடிப்பின் மீதான தனது ஆர்வத்தை விடாமல் பயணித்த ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை சினிமாத்தனமான அணுகுமுறையுடன் சொல்லும் முயற்சி – இந்தப் படம்.


