1995 – 96ஆம் ஆண்டுகளில் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் மூலம் டி.டி.வி. தினகரன் ஒரு கோடியே 4 லட்சம் அமெரிக்க டாலர்களை வெளிநாடுகளில் முதலீடு செய்ததாகவும், அதில் மோசடி நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யவேண்டும் எனவும், விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி எம்.எஸ் ரமேஷ், அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி. தினகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுப் பதிவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் வரும் 31ஆம் தேதிக்குள் புதிதாக குற்றச்சாட்டு பதிவு செய்து, அதன் மீது தினமும் விசாரணை நடத்தி 3 மாதத்திற்குள் வழக்கை முடிக்கவேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.