உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவு ரெயில் தடம்புரண்டு 52 பேர் காயம்

ஜபல்பூர்-நிஜாமுதீன் மகாகவுசல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு மத்திய பிரதேசத்தில் இருந்து புறப்பட்டு வந்தது. உத்தர பிரதேச மாநிலம் மகோபா ரெயில் நிலையம் அருகே சென்றபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், அந்த ரெயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தை உடைத்துக்கொண்டு தரையில் புதைந்தது. சுமார் 400 மீட்டர் நீளத்திற்கு தண்டவாளம் சேதம் அடைந்தது.

இந்த விபத்துபற்றி தகவல் அறிந்த ரெயில்வே மீட்புக்குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 52 பயணிகள் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து திட்டமிட்ட நாசவேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால், முதற்கட்ட விசாரணையில் அப்படி எதுவும் சந்தேகப்படும்படியான தகவல் கிடைக்கவில்லை என காவல்துறை கூடுதல் இயக்குனர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என கூறினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாநில சுகாதாரத்துறை மந்திரி சித்தார்த் நாத் சிங், சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை பார்வையிட்டார். பின்னர் விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்தார். 

ரெயில்வே வாரிய உறுப்பினர் முகமது ஜாம்ஷெட், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ரெயில் தடம்புரண்டது தொடர்பாக ரெயில்வேயின் மூத்த அதிகாரியால் விசாரணை நடத்தப்படும்’ என்றார். இது நாசவேலையா அல்லது பராமரிப்பு குறைபாடு காரணமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, எதையும் உறுதியாக கூற முடியாது என்றார்.