கழுகுமலைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா வழிகாட்டிகள் சிறப்பான வரவேற்பு

இந்திய சுற்றுலாவை மேம்படுத்தவும், இந்தியாவில் உள்ள தொன்மையான வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், நமது கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வெளிநாட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்தியா சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு சுற்றுலா வழிகாட்டிகள், உள்நாட்டு சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சுற்றுலா ஆர்வலர்கள் என 150க்கும் மேற்பட்ட அடங்கிய குழுவினை ஏற்படுத்தி, அவர்களை தனிதனி 10க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரித்து இந்தியா முழுவதும் உள்ள பழமை வாய்ந்த இடங்கள், சுற்றுலாத்தலங்கள் ஆகியவற்றை பார்வையிட செய்து, அதன் வரலாறுகளை தெரிந்து கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் குழுவினர் தமிழகத்தில் மதுரையில் இருந்து கன்னியாகுமாரியில் வரையில் உள்ள இடங்களை பார்வையிட்டு வருகின்றனர். அந்த குழுவினர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலைக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு தாமரைப்பூ கொடுத்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த குழுவினர் கழுமலையில் உள்ள வெட்டுவான் கோவில், சமணர்பள்ளி மற்றும் கழுகாசலமூர்த்தி திருக்கோவில் ஆகிய இடங்களை பார்வையிட்டனர். மேலும் இதன் சிறப்புகள் குறித்தும் தெரிந்து கொண்டனர். பின்னர் அந்த குழுவினர் கூறுகையில் தமிழகம் வரலாற்று சிறப்புமிக்க இடமாக உள்ளது. யூனஸ்கோ தமிழகத்தினை வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாக அறிவிப்பு செய்யும் வகையில் பல தொன்மை மற்றும் மக்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் சின்னங்கள் காணப்படுவதாகவும், இந்த பயணம் தங்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாக தெரிவித்தனர்;.