‘ஹபீபி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றுள்ள இளம் நடிகர் ஈசா, தனது வெற்றிக்கான முழு பெருமையும் இயக்குநர் மீரா கதிரவனுக்கே சேரும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த ஈசா, சட்டம் பயிலும் மாணவராகவும், தேசிய அளவிலான தடகள வீரராகவும் இருந்த நிலையில், உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். பின்னர் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய ‘ஹபீபி’ திரைப்படத்தின் ஆடிஷனில் தேர்வாகி கதாநாயகனாக அறிமுகமானார்.
படத்திற்காக பல மாதங்கள் பயிற்சி, ரிகர்சல் மற்றும் கதாபாத்திரத்திற்கேற்ப உடல் எடையை மாற்றியதுடன், மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் வரும் கதாபாத்திரங்களை இயல்பாக நடித்துள்ளார். அவரது நடிப்பை மாரி செல்வராஜ், சுதா கொங்கரா, வெற்றிமாறன், அமீர், சேரன், மிஷ்கின் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.
தனது வெற்றி குறித்து பேசிய ஈசா, “இன்று எனக்குக் கிடைத்திருக்கும் அத்தனை அங்கீகாரத்திற்கும், பாராட்டுகளுக்கும், புகழுக்கும் முழுச் சொந்தக்காரர் என் இயக்குநர் மீரா கதிரவன்தான். ஒரு புதுமுக நடிகரை நம்பி இவ்வளவு பெரிய வாய்ப்பை வழங்கியவர் அவர்தான். இனி அவர் வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நல்ல படங்களைத் தேர்வு செய்து நடிப்பதே என் பொறுப்பு” என்று கூறினார்.
‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டு புதிய திரைப்படங்களில் கதாநாயகனாக ஈசா ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படங்களும் வணிக அம்சங்களுடன் சமூக கருத்துக்களைக் கொண்டதாக இருக்கும் என்றும், அவற்றின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறிய பட்ஜெட்டில் உருவாகும் தரமான திரைப்படங்களுக்கு வெளியீட்டுக்கு முன்பே போதிய ஆதரவு கிடைக்க வேண்டும் என்றும், நடிகராக மட்டுமல்லாமல் விளையாட்டு வீரராகவும் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் ஈசா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

