எனக்கு வாய்த்த அடிமைகள் – விமர்சனம்

சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் ஜெய், அதே கம்பெனியில் கூடவே பணிபுரியும் பிரணிதா மீது காதல் கொள்கிறார். அவளிடம்  தனது காதலை சொல்வதற்கு முன்பே இரண்டு பேரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுக்குள் கசமுசாவும்  நடந்துவிடுகிறது. அதன்பின்னர், தனது காதலை அவளிடம் சொல்லி, இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில், ஒருநாள் பார்ட்டியில் வேறொருவருடன் பிரணிதா நெருக்கமாக இருப்பதை பார்க்கும் ஜெய், மனமுடைந்து அவளை  பிரிந்து செல்கிறார். மிகவும் மன உளைச்சலில் இருக்கும் ஜெய், இதற்காக மனோதத்துவ நிபுணரான தம்பி ராமையாவிடம் செல்கிறார்.  ஆனால், தம்பி ராமையாவின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள முடியாத ஜெய், ஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள  முடிவெடுக்கிறார். தன்னுடைய தற்கொலை முடிவை நண்பர்களான காளி வெங்கட், கருணாகரன், நவீன் ஆகியோர்களிடம் சொல்கிறார் ஜெய். ஆனால்,  அவர்கள் இதை அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஒருகட்டத்தில் ஜெய் தற்கொலை செய்துகொள்ளப்போவது உண்மைதான்  என்பதை அறிந்து அவரை காப்பாற்ற மூவரும் புறப்படுகிறார்கள். அந்த நேரத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினையில் மாட்டிக்  கொள்கிறார்கள். தற்கொலை முடிவுக்கு போன ஜெய், டிவியில் சந்தானத்தின் பேச்சை கேட்டு மனம் திருந்தி தற்கொலை முடிவை கைவிடுகிறார்.  அதன்பின்னர், தன்னை காப்பாற்ற புறப்பட்ட நண்பர்கள் பிரச்சினையில் மாட்டிக் கொண்டதை அறிந்து கொள்கிறார். அவர்களை ஜெய்  எப்படி மீட்டார்? ப்ரணிதாவுடன் மீண்டும் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை. ஜெய் வழக்கம்போல் தனது அலட்டல் இல்லாத நடிப்பில் ரசிக்க வைக்கிறார். தற்கொலை செய்துகொள்ளும் முடிவோடு வரும் இவர்,  அதை செய்யாமல் சினிமா பாடல்களை கேட்டு அலப்பறை பண்ணும் இடங்களில் எல்லாம் கிளாப்ஸ் வாங்குகிறார். அதேபோல், தனக்கு  உதவி செய்ய முன்வந்த தம்பிராமையாவை நடுஇரவில் இவர் செய்யும் டார்ச்சர்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. நாயகி ப்ரணிதாவுக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. இருப்பினும், ஓரளவுக்கு கிளாமரில் வந்து ரசிகர்களை  குஷிப்படுத்தியிருக்கிறார். நண்பர்களாக வரும் காளி வெங்கட், கருணாகரன், நவீன் ஆகியோர் காமெடியில் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.  இருப்பினும், ஆங்காங்கே சில தொய்வுகள் இருக்கிறது.  மனோதத்துவ நிபுணராக வரும் தம்பி ராமையா தன் பங்குக்கு காமெடியில் கலக்கியிருக்கிறார். கருப்பு ராக்காக வரும் மொட்டை  ராஜேந்திரன், டிவி தொகுப்பாளராக வரும் படவா கோபி ஆகியோரும் படத்தின் காமெடிக்கு உதவியிருக்கிறார்கள். சந்தானம் ஒரேயொரு  காட்சியில் வந்தாலும், படத்தில் காதலர்களுக்கு நல்ல கருத்தை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.  இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், ஓவர் காமெடி  படத்தை முழுமையாக ரசிக்க முடியாமல் செய்துவிட்டது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர், அதை எல்லை  மீறாமல் கொடுத்திருந்தால் படத்தை கண்டிப்பாக ரசித்திருக்கலாம். சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் எல்லாம் கேட்பதற்கு அழகாக இருக்கிறது. அதை படமாக்கியவிதமும் அருமை. ‘கண்ணாடி  பூவுக்கு வண்ணமில்லை’ என்ற பாடலை படமாக்கிய விதம், அந்த பாடலை வெகுவாக ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் தனது  பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். மகேஷ் முத்துச்சுவாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது. பாடல்  காட்சிகளில் இவரது கேமரா தனித்துவம் காண்பித்திருக்கிறது.