4 மணிக்கு முதலமைச்சராகிறார் எடப்பாடி பழனிச்சாமி

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா முதலமைச்சராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், தங்கள் பக்கம் வருவதற்கு மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் விரும்புவதாக கூறியதால் குழப்பம் நீடித்தது.
இதையடுத்து, கவர்னர் தரப்பிலிருந்து எந்த அழைப்பும் விடுக்காததால், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கவர்னருக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். பின்னர் இரவு சுமார் 8 மணியளவில் அமைச்சர்களுடன் சென்று கவர்னரை சந்தித்து, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி கூறினார்.

தனக்கு 124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறி கடிதம் கொடுத்தார். பின்னர் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். இந்நிலையில் இன்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன்படி கூவத்தூரில் இருந்து அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சந்திப்பின் முடிவில், எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஆளுநருடனான சந்திப்பு முடிந்து வெளியே வந்த அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் பேசும்போது, இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அப்போது புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கடந்த 10 நாட்களாக நிலவிய இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. எனினும், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளதால், இன்னும் 15 நாட்களுக்கு அரசியல் பரபரப்பு நீடிக்கும்.