‘டோரதி’ விமர்சனம்

மனிதர்களுக்கு இடையிலான உறவுகளை தீர்மானிப்பது சாதியோ, பாலினமோ, சமூகத்தின் பார்வையோ அல்ல… மனதில் இருக்கும் அன்பும் புரிதலும் மட்டுமே என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது ‘டோரதி’.

சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருக்கும் சனந்த் மற்றும் ரிஷிகாந்த். ஆண்மை என்றால் துணிச்சலும் ஆதிக்கமும் தான் என நம்பி வளர்கிறார் சனந்த். அவரது தாக்கத்தில் ரிஷிகாந்தும் அதே பாதையை நோக்கி நகர்கிறார். இருவரின் நட்புக்குள் சாதி குறுக்கிடாத போதும், சனந்தின் குடும்பத்தில் நிலவும் சாதிய மனநிலை ரிஷிகாந்தை விலக்கிப் பார்க்கிறது.

இந்தச் சூழலில்தான் சனந்தின் அண்ணனாக வரும் செளந்தர்ராஜாவுக்கு கீர்த்தி சுரேஷ் மனைவியாகிறார். அவருடன் சனந்த் காட்டும் அன்பும் நெருக்கமும் கதையின் போக்கையே மாற்றுகிறது. அதன் பின்னர் வெளிப்படும் சில உண்மைகளும், அதனால் உருவாகும் அதிர்ச்சிகளும் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்றன.

பாலினத்தை வைத்து மனிதர்களை மதிப்பிடும் சமூக மனநிலைக்கும், எல்லைகளைக் கடந்து செல்லும் பேரன்புக்கும் இடையிலான மோதலாக விரிகிறது திரைக்கதை. இறுதியில் வெல்வது யார் என்பதைவிட, நாம் எதன் பக்கம் நிற்கிறோம் என்ற கேள்வியையே பார்வையாளர்களிடம் எழுப்புகிறது படம்.

கீர்த்தி சுரேஷ் கதையின் முக்கியமான பாத்திரமாக இருந்தாலும், அவருக்கான திரை நேரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆனால் கிடைக்கும் காட்சிகளில் தனது கதாபாத்திரத்தின் உணர்வுகளை மிக அழுத்தமாக வெளிப்படுத்துகிறார்.

சனந்த் இந்தப் படத்தில் கதையின் மையமாகவே மாறுகிறார். இதுவரை பார்த்திராத ஒரு நடிப்புப் பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாபாத்திரத்தின் பயணம் அவரது நடிப்பால் நம்பும்படியாகிறது.

ரிஷிகாந்தின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. இயலாமை, குழப்பம், குற்றவுணர்வு என பல்வேறு உணர்வுகளை வசனங்களைத் தாண்டி முகபாவனைகளில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

முத்துக்குமார் மற்றும் செளந்தர்ராஜா ஆகியோரின் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களுக்குள் கோபத்தை உருவாக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன. அந்த வெறுப்பை இயல்பாகக் கடத்தும் அளவுக்கு இருவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் திருவின் கேமரா படத்தின் மற்றொரு பலம். காட்சிகளை பதிவு செய்வதைத் தாண்டி, கதையின் உணர்வுகளையே கேமரா வழியாகச் சொல்லியிருக்கிறார். பல இடங்களில் காட்சிகளின் தாக்கத்தை அதிகரிப்பது ஒளிப்பதிவுதான்.

இளையராஜாவின் இசை படத்திற்கு தனி உயிர் கொடுக்கிறது. காட்சிகளின் உணர்வோடு இணைந்து பயணிக்கும் பின்னணி இசை பல தருணங்களை இன்னும் வலிமையாக்குகிறது. ‘முத்துமணி’ பாடல் இடம்பெறும் பகுதி குறிப்பாக மனதில் நிற்கிறது.

திருநங்கை வாழ்வின் வலியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் ஏற்கனவே இருந்தாலும், அதை சினிமாவின் காட்சிமொழியில் இன்னும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உருவாக்கிய விதத்திலும், அவர்களின் மனநிலையை திரையில் கடத்தும் விதத்திலும் இயக்குநரின் உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. மேக்கிங், காட்சியமைப்பு, கதாபாத்திரங்களின் வடிவமைப்பு என அனைத்திலும் ஒரு கலைநயமான அணுகுமுறை தெரிகிறது.

உருவத்தை வைத்து ஒருவரை வரையறுக்க முயலும் சமூகத்திடம், அவர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் புரிந்துகொள்ளச் சொல்லும் படமாக ‘டோரதி’ அமைந்திருக்கிறது.

படத்தின் இறுதிப் பகுதி சற்று நீளமாக உணரப்பட்டாலும், கதையின் உணர்வுக்கு அந்த முடிவு தேவையானதாகவே தோன்றுகிறது.

மொத்தத்தில், வழக்கமான கதைக்களத்தைத் தாண்டி மனிதநேயம், அன்பு, பாலின அடையாளம், சமூக மனநிலை ஆகியவற்றை பேசும் அழுத்தமான படைப்பு ‘டோரதி’.

‘டோரதி’ – பார்த்துவிட்டு கடந்து செல்ல முடியாத சினிமா!