தோஹா வங்கியின் புதிய கிளை இப்போது சென்னையில்

சென்னையில், தோஹா வங்கி கிளை திறப்பு

‘கத்தார், இந்தியா இடையே உலகளாவிய ஒருங்கிணைப்பை மேம்படுத்தும்’- சீதாராமன்
பெருமிதம்

கத்தார் நாட்டைச் சேர்ந்த தோஹா வங்கியின் கிளை சென்னையில் இன்று திறக்கப்பட்டது. இந்த வங்கி கத்தார், இந்தியா இடையே உலகளாவிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் என்று வங்கியின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். ஆர். சீதாராமன் கூறினார். கத்தார் நாட்டின் மிகப்பெரிய தனியார் வணிக வங்கிகளில் தோஹா வங்கியும் ஒன்றாகும். இந்தியாவை பொறுத்தமட்டில் தோஹா வங்கியின் கிளைகள் மராட்டிய மாநிலத்தின் மும்பை நகரிலும், கேரளத்தின் கொச்சியில் உள்ளது. இந்த நிலையில் வங்கியின் மூன்றாவது கிளை சென்னையில் தொடங்கப்பட்டு உள்ளது. தென் மாநில மக்களின் தேவையை கருத்தில் கொண்டு சென்னையில் கிளை தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தோஹா வங்கியின் தலைமை செயல் அதிகாரி டாக்டர்.ஆர். சீதாராமன் கூறியதாவது:-

சென்னையில் எங்கள் வங்கியின் மூன்றாவது வங்கி கிளை, இந்தியாவில் விரிவாக்க யுக்திகளை வைத்திருக்கும் என்று நம்புகிறோம். இந்திய சந்தையில் மூன்று இடங்களில் எங்களது அர்ப்பணிப்பு வளர்ந்து வரும் நிலையில், பெருநகரான சென்னை கிளை பரந்து விரிந்த வாடிக்கையாளர்களையும் ஒருங்கிணைக்கும். கத்தார் மற்றும் இந்தியா இடையே உலகளாவிய ஒருங்கிணைப்புகளை மேம்படுத்த உதவும். வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் கணிசமாக உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார் மற்றும் ஓமன் நாடுகளில் அதிகளவு உள்ளனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தமிழர்களும் அதிகளவு வசிக்கின்றனர். தோஹா வங்கி, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், மற்றும் கத்தார் குடிமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அதில் வீட்டுக் கடன் திட்டம், செல்வ மேலாண்மை திட்டங்கள், காப்பீட்டு திட்டங்கள் மற்றும் ஸ்வகத் திட்டம் என்னும் ஒரே கணக்கில் 4 திட்டங்களை பெறுதல் ஆகியவை எங்களின் சிறப்பியல்புகள் ஆகும்.

மேலும் சிறு மற்றும் குறு தொழிலாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கடன்கள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் கத்தார் நாட்டிலும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும் போது, தோஹா வங்கியின் சேமிப்பு வட்டி வீதம் சிறப்பாக உள்ளது. இதுமட்டுமின்றி சில சிறப்பு திட்டங்களை அமல்படுத்துவது குறித்தும் பரிசீலித்து வருகிறோம். சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்த கிளை, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம் மற்றும் ஆந்திரா மக்களுக்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.