தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபையில் வரும் 2017 – 18ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் டி.ஜெயகுமார் வியாழக்கிழமை தாக்கல் செய்கிறார். இதற்காக சட்டசபையை காலை 10.30 மணிக்குக் கூட்ட பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார். நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கம் ஆகியவை குறித்த அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். மேலும், வரிகளை உயர்த்தும் பட்ஜெட்டாக இது இருக்குமா? அல்லது வரியில்லாத பட்ஜெட்டாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர் பிரச்சினை, ரேசன் கடை பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, மறைமுக பஸ்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் அணியினரும் பிரச்சினையை கிளப்ப வாய்ப்புள்ளது. இதனால் நாளைக்கு கூட இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் அரசியல் பரபரப்பு மிகுந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளரும், சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் உள்ளிட்டோர் பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எம்.எம்.ஏக்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.