ஆர்கே நகர் தொகுதியில் 12 நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார் அதிமுக அம்மா அணி வேட்பளர் டிடிவி தினகரன். அவர் ஆர்கே நகர் தொகுதியில் ஆட்டோவில் பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருவது மக்களிடையே ஆச்சர்யத்தையும் விமர்சனத்தையும் எழுப்பியுள்ளது. ஆர்கே நகர் தொகுதியில், இன்னும் 9 நாட்களில் இடைதேர்தல் நடக்கவுள்ளதால், அனைத்துக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 11 நாட்களுக்கு முன்பு, டிடிவி தினகரன் ஆர்கே நகரில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது திறந்தவெளி ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்கிடையில், டிடிவி தினகரன் அணியினர் வாக்காளர்களுக்கு பொருட்களும் பணமும் வழங்கினர் என்று கூறி நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், டிடிவி தினகரன் வெளியூரில் இருந்து அடியாட்களை வரவழைத்து, தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளார் என ஓபிஎஸ் அணியினர் தேர்தல் கமிஷனர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் தெரிவித்து வந்துள்ளனர்.
ஆர்கே நகர் தொகுதியில், தினகரனுக்கு மக்கள் ஆதரவு குறிப்பிடும்படி இல்லை என பல தனியார் கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் கூறி வருகின்றன. இந்நிலையில் 12ஆவது நாளாக பிரச்சாரத்துக்கு அமைச்சர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஆட்டோவில் சென்றுள்ளார். தினகனரன் ஆட்டோவில் செல்வது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும், அதேவேளையில் ஏன் இப்படி என்கிற விமர்சனத்தையும் எழுப்பியுள்ளது. ஆர்கே நகர் தொகுதியில் பெரும்பாலான சாலைகள் குறுகலானது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சி வேட்பாளர்கள் கால்நடையாகச் சென்றுதான் வாக்கு சேகரிக்கின்றனர்.