வியாழன்தோறும் டெங்கு கொசு ஒழிப்பு தினம்

தமிழகம் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலசோனைக் கூட்டம் நடந்தது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, இந்திய முறை மருத்துவத்தின் இயக்குனர் மோகன் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “இந்த மாதம் முதல் ஒவ்வொரு வார வியாழக்கிழமைகளில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தப்படும். அன்றைய தினம் அரசு அலுவலகங்களை எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.  நில வேம்பு கஷாயங்களை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவசமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை காலை முதல் சென்னை மாநகராட்சி முழுவதற்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கும் பணி தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை விரைவுபடுத்தி வருகிறது” என்று கூறினார்.