டெலிவரி பாய் – விமர்சனம்

உணர்வுகளும் விறுவிறுப்பும் கலந்த சுவாரஸ்யமான பயணம் “டெலிவரி பாய்” 

இயக்குநர் நானி இயக்கத்தில் லியோ சிவக்குமார், ராதிகா சரத்குமார், பிரிஜிடா சாகா, காளி வெங்கட், துஷ்யந், உதயா மற்றும் பலர் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார்.

காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் பயணிக்கும் லியோ சிவக்குமார், குடும்பச் சூழல் காரணமாக டெலிவரி பாய் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அவரது தாயாருக்கு ஏற்படும் விபத்து வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. தாயின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில், எதிர்பாராத விதமாகப் பணத்தைத் திருடும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார். பின்னர் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் மேற்கொள்ளும் முயற்சி, மற்றொருவரின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் பெரிய பிரச்சினையுடன் இணைகிறது. கொலைக் குற்றத்தில் சிக்கித் தவிக்கும் அந்த நபரைக் காப்பாற்ற சிவக்குமார் எடுக்கும் முயற்சிகளே படத்தின் மீதிக்கதை.

வழக்கமான கதைக்களத்துக்குள் ஒரு சுவாரஸ்யமான திருட்டுச் சம்பவத்தையும், அதனைத் தொடர்ந்து நிகழும் எதிர்பாராத திருப்பங்களையும் இணைத்திருப்பது படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம். கதையின் நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவக்குமார், நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் நம்பிக்கையுடன் செயல்பட்டிருக்கிறார். தனக்குக் கிடைத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

ராதிகா சரத்குமாருடன் அவர் பகிர்ந்துகொள்ளும் தாய் – மகன் பாசக் காட்சிகள் படத்தின் உணர்வுப்பூர்வமான பகுதிகளாக அமைந்துள்ளன. இருவரின் நடிப்பும் அந்தக் காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. காதல் காட்சிகளிலும் லியோ சிவக்குமார் கவனம் ஈர்க்கிறார். நாயகியாக வரும் பிரிஜிடா சாகா தனது கதாபாத்திரத்தை இயல்பாகக் கையாண்டுள்ளார். காளி வெங்கட் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

படத்தின் மிகப்பெரிய பலம் இயக்குநர் நானியின் திரைக்கதை. கதையைச் சுவாரஸ்யமாக நகர்த்துவதுடன், அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களின் கவனத்தைத் தக்கவைக்கிறார். குறிப்பாக, இறுதிப் பகுதியை நோக்கி கதை நகரும் விதம் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. தொழில்நுட்ப ரீதியாகவும் படம் சிறப்பாக அமைந்துள்ளது. சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையும் பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வுகளுக்குப் பக்கபலமாக இருக்கின்றன. ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கிறது. சண்டைக் காட்சிகளும் நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, படத்தின் கடைசி 15 நிமிடங்கள் பரபரப்புக்கும் எதிர்பாராத திருப்பங்களுக்கும் பஞ்சமில்லாமல் அமைந்துள்ளன. இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் இணைந்து அந்த இறுதிக்கட்டக் காட்சிகளைப் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் உருவாக்கியுள்ளனர்.

சிறிய அளவிலான கதைக்களத்தில் உணர்வுகளையும் ஆக்ஷனையும் விறுவிறுப்பான திரைக்கதையையும் இணைத்து, லியோ சிவக்குமாருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறது ‘டெலிவரி பாய்’. இயக்குநர் நானியின் கதை சொல்லும் திறமைக்கும் முயற்சிக்கும் பாராட்டுகள்!

தாய்ப்பாசமும் மனிதநேயமும் விறுவிறுப்பான திரைக்கதையும் கலந்த ரசிக்கத்தக்க இந்த “டெலிவரி பாய்” உணவை மட்டுமல்லாமல் தாய் பாசம், மனிதநேயம், நன்றி கடன் என எல்லாவற்றையும் டெலிவரி செய்துள்ளது.