போர்களத்தில் பெண்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியா புதிய வரலாறு படைக்கவுள்ளது. உலக நாடுகளில், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, டென்மார்க், நார்வே, பிரிட்டன், பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் ஸ்வீடன் நாடுகளில் மட்டுமே போர்க்களத்தில் பெண்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இந்தியாவும் புதிய வரலாற்றை படைக்க உள்ளது.
இதற்கு முன்பு விமானப் படையில் அவானி சதுர்வேதி, மோகனா சிங் மற்றும் பாவனா காந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதே நேரத்தில், தரைப்படையை பெறுத்தவரை டெக்னிக்கல் பிரிவு, மருத்துவம் உள்ளிட்டவைகளில் மட்டுமே பணியில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், போர்களத்தில் ஆண்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களை அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் போர்க்களத்திலும் பெண்களை ஈடுபடுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதாவது, போர்களத்தில் பெண்களை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளோம். இதன் முதற்கட்டமாக ராணுவ போலீஸ் பிரிவில் பெண்களை பணியமர்த்தப்படுவார்கள். பின்னர் அவர்களை போர்க்களத்தில் பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவார்கள். போர்களத்தில் எதிரிகளுடன் திறமையாக செயல்பட்டு, எதிரிகளின் சவால்களைப் பெண்கள் முறியடிப்பார்கள் என கூறினார். ராணுவ போலீஸில் இருப்பவர்கள், ராணுவ நிலைகள் மற்றும் கட்டுப்பாட்டு நிலைகளை கண்காணிப்பது, வீரர்கள் விதிகளை மீறாமல் தடுப்பது, மாநில போலீஸாருக்கு உதவிகளை செய்வது உள்ளிட்ட பணிகளை செய்வார்கள்.