சென்னையைச் சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளியான தஷ்வந்த்-யை போலீஸ் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது. இந்நிலையில் தஷ்வந்த்தின் தந்தை தொடர்ந்த வழக்கில், அவன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தஷ்வந்த் ஜாமீன் பெற்று வெளியே வந்தான். குன்றத்தூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த தஷ்வந்த் கடந்த 2ஆம் தேதி அன்று தனது தாய் சரளாவை கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடி விட்டான்.
தொடர்ந்து குன்றத்தூர் போலீசார் தஷ்வந்த்-யை தீவிரமாக தேடி வந்த நிலையில், மும்பையில் கைது செய்யப்பட்டான். பின்னர் அவனை சென்னை கொண்டு வரும் போது மும்பை விமான நிலையத்தில் இருந்து தப்பியோடினான். அதையடுத்து, மீண்டும் இரண்டாவது முறையாக அவனை போலீசார் கைது செய்து நேற்று இரவு சென்னை கொண்டு வந்தனர். குற்றவாளி தஷ்வந்த்-யை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் சுமார் 12 மணி நேரம் அவனிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலத்தில், தன்னுடைய தாய் சரளா எப்போதும் தன்னை திட்டிக்கொண்டே இருந்ததாலும், பணம் தராததாலும் அவரை சுத்தியால் அடித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான்.
மேலும் கொலை செய்தது எப்படி என்பது குறித்தும் போலீசாருக்கு நடித்து காண்பித்தான். செலவுக்கு பணம் தராததால் தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளான். இதைத் தொடர்ந்து இந்த விசாரணைக்கு பிறகு, தஷ்வந்த்க்கு உதவி செய்த அவரது நண்பர்கள் தாஸ், டேவிட் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.