பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் வழியாகவே, இந்தியாவுக்குள் ஊடுருவும் போலி ரூபாய் நோட்டுகள் பெரும்பாலும் வருகின்றன. இந்தியாவில் கருப்பு பணம் மற்றும் போலி ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் விதமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதனால் பாகிஸ்தானில் போலி ரூபாய் நோட்டு தொழில் பெரும் சரிவை சந்தித்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இவற்றை போலியாக உருவாக்க முடியாது எனவும் தெரிவித்தது. ஆனால் இந்த நோட்டுக்கள் அறிமுகப்படுத்தபட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே போலி ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்து அரசுக்கு அதிர்ச்சி அளித்தன. இந்த ரூபாய் நோட்டுகள் வங்கதேசம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவி உள்ளன. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னர் வரை பாகிஸ்தான் தான் போலி இந்திய பண உற்பத்தியில் முதல் இடத்தில் இருந்தது. தற்போது அதனை வங்கதேசம் முந்தியுள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு, மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 இடங்கள் வழியாக கருப்பு பணம் இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுகிறது.
இந்த பகுதிகளை எல்லை பாதுகாப்பு படையினர் மிகவும் உன்னிப்பாக கவனித்து சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் அதிக அளவில் போலி ரூபாய் நோட்டுகள் இங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஏப்ரல் மாதம் மட்டும் 20 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் மட்டும் 32 லட்ச ரூபாய் போலி ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆனால் இது கடந்த ஆண்டை விட குறைவாகும்(1.5 கோடி ரூபாய்). 2000 ரூபாய் நோட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தாள்களை மலேசியா மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து போலி பண தயாரிப்பு கும்பல் கடத்தி வருகின்றனர். கருப்பு பணம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டாலும் அவை இந்தியாவிற்குள் ஊடுருவாமல் தொடர்ந்து நமது பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர்.