‘கான் சிட்டி’ வெற்றிக்கு காரணம் ரசிகர்கள்தான் – படக்குழுவினர் நெகிழ்ச்சி!

அர்ஜூன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ‘கான் சிட்டி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா உற்சாகமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் படக்குழுவினர், படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர் பேசுகையில், இயக்குநர் ஹரிஷ் துரைராஜின் அர்ப்பணிப்பையும், அவருடைய தொலைநோக்குப் பார்வையையும் பாராட்டினார். இது அவருடைய முதல் படமாக இருந்தாலும், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதாகவும், எதிர்காலத்தில் அவர் இன்னும் பல உயரங்களை அடைவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பிஸியான சூழலிலும் நடனப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய அர்ஜூன் தாஸுக்கும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.

எடிட்டர் அருள் மோசஸ், ‘கான் சிட்டி’ படத்திற்கு கிடைத்த வெற்றியில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார். குறிப்பாக, வேர்ட் ஆஃப் மவுத் மூலம் படம் அதிகமான ரசிகர்களை சென்றடைந்ததாகவும், படத்தைப் பார்த்து மற்றவர்களுக்கும் பரிந்துரைத்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.

விநியோகஸ்தர் ஐயப்பன், படம் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும், இயக்குநர் ஹரிஷ் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், அர்ஜூன் தாஸ் தொடர்ந்து குடும்ப ரசிகர்களும் ரசிக்கும் கதைகளில் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

நடிகர்கள் கல்கி ராஜா, ரகு, ஆதித்யா கதிர் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் படத்தில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இயக்குநர் ஹரிஷின் உழைப்பு, படக்குழுவினரின் ஒற்றுமை மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வழங்கப்பட்ட முக்கியத்துவம் ஆகியவற்றை அவர்கள் பாராட்டினர்.

நடிகர் ஆதித்யா கதிர் பேசுகையில், அர்ஜூன் தாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் தொடங்கி இன்று கதாநாயகனாக உயர்ந்து வருவதைப் பாராட்டினார். படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற அவரது பெருந்தன்மையை குறிப்பிட்டு, அவர் இன்னும் மிகப்பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்று வாழ்த்தினார்.

படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சதா, ரசிகர்கள் தந்த அன்பையும் வரவேற்பையும் நினைத்து நெகிழ்ச்சியுடன் பேசினார். படம் வெளியான பிறகு தனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், திரைப்பட உருவாக்கத்தின் பல்வேறு துறைகளில் நேரடியாகப் பயணித்து கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

பாடலாசிரியர் மோகன் ராஜ், படத்தின் வெற்றிக்கு ஊடகங்களும் ரசிகர்களும் முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார். இயக்குநர் ஹரிஷை பாராட்டிய அவர், ‘கான் சிட்டி’ அவருடைய பயணத்தின் முதல் வெற்றிப்படி மட்டுமே என்றும், எதிர்காலத்தில் மிகப்பெரிய படைப்புகளை உருவாக்குவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுடன் தனது வெற்றிக் கூட்டணி தொடரும் என்றும் கூறினார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இயக்குநர் ஹரிஷின் தனித்துவமான சிந்தனையையும், பல கதாபாத்திரங்களை கொண்ட கதையை நேர்த்தியாக இரண்டு மணி நேர திரைப்படமாக உருவாக்கிய விதத்தையும் பாராட்டினார். படத்தில் சிறிய கதாபாத்திரம் முதல் முக்கிய கதாபாத்திரம் வரை அனைவருக்கும் ரசிகர்களின் மனதில் நிற்கும் தருணங்கள் அமைந்துள்ளதாகவும், ஹரிஷ் எதிர்காலத்தில் பான் இந்தியா மற்றும் பான் வேர்ல்ட் அளவிலான படங்களை உருவாக்குவார் என்றும் வாழ்த்தினார்.

நடிகர் அர்ஜூன் தாஸ், படத்தின் வெற்றிக்கு முழு பாராட்டும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜுக்கே சேரும் என்று தெரிவித்தார். மூத்த மற்றும் திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது பெருமையாக இருந்ததாகவும், ரசிகர்கள், குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் அளித்த வரவேற்பு தன்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்ததாகவும் கூறினார். தொடர்ந்து நல்ல படங்களை ரசிகர்களுக்கு வழங்குவேன் என்றும் உறுதியளித்தார்.

நடிகை வடிவுக்கரசி பேசுகையில், ‘கான் சிட்டி’ படத்தின் மூலம் தனக்கு கிடைத்த புதிய வரவேற்பை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். தன்னை வேறொரு கோணத்தில் காட்டிய இயக்குநர் ஹரிஷுக்கு நன்றி தெரிவித்த அவர், தன்னைப் போன்ற கலைஞர்களுக்கு தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்க ஊடகங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நடிகர் விடிவி கணேஷ், இயக்குநர் ஹரிஷின் திறமை மற்றும் திட்டமிடலைப் பாராட்டியதுடன், சிறிய படங்களும் நல்ல உள்ளடக்கத்தின் மூலம் வெற்றிபெற முடியும் என்பதை ‘கான் சிட்டி’ நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் பேசுகையில், ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் வெற்றிக்கு ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். 25 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுவது இன்றைய சூழலில் மிகப்பெரிய சாதனை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், படத்தை உருவாக்க நம்பிக்கையுடன் ஆதரவளித்த தயாரிப்பாளர்கள், இணை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக வடிவுக்கரசி, அன்னா பென், யோகி பாபு மற்றும் அர்ஜூன் தாஸ் ஆகியோரின் பங்களிப்பை பாராட்டினார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டதே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் கூறினார்.

ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, கடனில் சிக்கித் தவிக்கும் குடும்பத்திற்கு எதிர்பாராத விதமாக பணம் அச்சிடும் இயந்திரம் கிடைப்பதைத் தொடர்ந்து நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை நகைச்சுவை, பரபரப்பு மற்றும் குடும்ப உணர்வுகளுடன் ‘கான் சிட்டி’ திரைப்படம் உருவாக்கியுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.