‘Cold Call’ விமர்சனம்

நான்கு இளைஞர்களின் எதார்த்த வாழ்க்கையை இயல்பாகப் பதிவு செய்திருக்கிறது ‘Cold Call’!

பெங்களூரை பின்னணியாகக் கொண்டு, வேலை, காதல், நட்பு என வாழ்க்கையின் அன்றாடச் சவால்களை எதிர்கொள்ளும் நான்கு இளைஞர்களின் பயணத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘Cold Call’.

மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் நான்கு நண்பர்களில் ஒருவர் மட்டும் வேலையில் சீரியஸாக இருக்க, மற்ற மூவரோ வேலை பற்றிய பெரிய கவலையின்றி ஜாலியாக சுற்றுகிறார்கள். வேலைப்பளு, காதல் பிரச்சினைகள், எதிர்பாராத சிக்கல்கள் என அடுத்தடுத்து வரும் சூழ்நிலைகளை இந்த நால்வரும் எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவர்களது வாழ்க்கையில் வேலை, காதல், வளர்ச்சி என எதிர்பார்த்த மாற்றங்கள் வந்ததா? என்பதுதான் கதையின் மையம்.

சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பாலாஜி, ஸ்ரீகாந்த், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி, கீர்த்தனா புல்கி ஆகியோரும் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக நடித்துள்ளனர்.

குறிப்பாக நாயகன் கதாபாத்திரத்தில் வரும் சித்து மூலிமணி, தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். மற்ற நடிகர்களும் ‘ஹீரோயிசம்’ காட்டாமல் கதையின் சூழலுக்குள் இயல்பாகப் பயணிப்பதால் கதாபாத்திரங்களுடன் எளிதாக ஒன்ற முடிகிறது.

ஒளிப்பதிவாளர் சரவணன், பெங்களூரின் வாழ்க்கை முறையையும், கதாபாத்திரங்கள் பயணிக்கும் இடங்களையும் இயல்பான காட்சிகளாக பதிவு செய்துள்ளார். படத்தின் எதார்த்தமான தன்மைக்கு ஒளிப்பதிவு முக்கியப் பங்களிப்பை வழங்குகிறது.

இசையமைப்பாளர் பிரணவ் கிரிதரனின் பின்னணி இசை கதைக்கு துணை நிற்கிறது. பாடல்களில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

வசனங்களில் சில இடங்களில் வரும் ஒன்லைன் கவுண்டர்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. பாலாஜி ராஜசேகர், தம்பிதுரை, நுதன், நிதின் சாம் ரெஜினோல்ட் ஆகியோர் இணைந்து வசனங்களை எழுதியுள்ளனர்.

இயக்குநர் தம்பிதுரை, நான்கு இளைஞர்களின் வாழ்க்கையை எந்தவிதமான செயற்கைத்தனமும் இல்லாமல் சொல்ல முயன்றிருக்கிறார். அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் என்ன பொருளை மார்க்கெட்டிங் செய்கிறார்கள் என்பதைக்கூட படம் பெரிதாக விளக்குவதில்லை. ஆனால் அந்த விஷயம் கதையை ரசிப்பதற்கு எந்தத் தடையையும் ஏற்படுத்தவில்லை.

நண்பர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள், வேலை தொடர்பான சிக்கல்கள், காதல் பிரச்சினைகள் என பல விஷயங்களையும் பெரிய பரபரப்பு இல்லாமல் இயல்பான தொனியில் கடத்தியிருப்பது படத்தின் முக்கிய பலம்.

அதுபோல சில சிறிய ஐடியாக்கள் படத்தின் ஓட்டத்தில் ஆங்காங்கே கவனம் ஈர்க்கின்றன.

கதாநாயகர்கள் எதற்கும் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல், வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ளும் இளைஞர்களாக வடிவமைக்கப்பட்டிருப்பது திரைக்கதையின் நல்ல அம்சம். அதே நேரத்தில், இன்னும் சில வலுவான சம்பவங்களையும் அழுத்தமான திருப்பங்களையும் சேர்த்திருந்தால் படத்தின் தாக்கம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

பெரிய ஹீரோயிசம், மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் எதுவும் இல்லாமல், நான்கு இளைஞர்களின் வேலை, காதல், நட்பு மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை எதார்த்தமான எழுத்து மற்றும் மேக்கிங்குடன் சொல்லியிருக்கும் படம் ‘Cold Call’.

பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தாமல், இயல்பான மனிதர்களையும் அவர்களது சின்னச் சின்ன பிரச்சினைகளையும் ரசிக்க வைக்கும் ஒரு டீசன்ட் வாட்ச் ஆக ‘Cold Call’ மனதில் நிற்கிறது.

எதார்த்தமான வாழ்க்கை… இயல்பான நட்பு… ஒரு டீசன்ட் ‘Cold Call’!