விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கடந்த வாரம் முதல் ஓடிடியிலும் வெளியாகி இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது பல நாடுகளில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் இன்னமும் அலைமோதிக் கொண்டிருக்கிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகவில்லை.
இந்நிலையில், மலேசியாவில் வாழும் ஆஷ்லினா என்ற பெண்மணி ‘மாஸ்டர்’ படத்தை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அவர் பலமுறை முயற்சித்தும் மலேசியாவிலிருந்து சென்னைக்கு வர முடியவில்லை. இவர் பிறந்து, வளர்ந்து, படித்தது அனைத்துமே சென்னை மயிலாப்பூரில் தான். இவரது தந்தை ஒரு தொழிலதிபராக இருந்து வருகிறார்.
இதையடுத்து, நீண்ட முயற்சிக்குப் பின்னர் மலேசியாவிலிருந்து சென்னைக்கு தனது குடும்பத்தினருடன் வந்து சேர்ந்தார் ஆஷ்லினா. வந்தவுடன் முதல் வேலையாக தியேட்டரில் ‘மாஸ்டர்’ படம் பார்ப்பதற்காக சென்றார். ஆனால், டிக்கெட் கிடைக்காத காரணத்தால் ஏமாற்றம் அடைந்தார். இதையடுத்து, தனது தந்தையிடம் சொல்லி அண்ணாசாலையில் உள்ள பிரபலமான ஒரு திரையரங்கில் ஒட்டுமொத்த இருக்கைகளையும் முன்பதிவு செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.
150 இருக்கைகள் கொண்ட அந்த தியேட்டர் மொத்தமாக புக்கிங் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள தனது உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு தியேட்டருக்கு சென்று படம் பார்த்து விசில் அடித்து விஜயைக் கண்டு ரசித்து, ‘மாஸ்டர்’-ஐ கொண்டாடித் தீர்த்தார். அதுமட்டுமல்லாது, வெளியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் முன்பு நின்று கத்திக் கூச்சலிட்டு விஜய் கத்துவதை போன்று போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் ஆஷ்லினா.
‘மாஸ்டர்’ படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே மலேசியாவில் இருந்து தான் பறந்து வந்ததாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மகளின் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் அவரது தந்தை அபூபக்கர் மகளின் குதூகலத்தை பார்த்து வியந்தார். மொத்தத்தில் ‘மாஸ்டர்’ தமிழகம் மட்டுமல்ல உலகெங்கிலும் வாழும் தமிழர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சான்றாக அமைந்திருக்கிறது.