35 நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கேற்கும் மூன்றாம் அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் தலைவர்கள் மூன்று நாள் (14 முதல் 16 வரை) மாநாடு

“எழுமின் “ – The Rise / தி ரைஸ் அமைப்பு நடத்தும் மூன்றாம் உலகத்தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மூன்று நாள் (14 முதல் 16 வரை) மாநாடு  சென்னை நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவக் கல்லூரி அரங்கில் தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இம் மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, நார்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், கத்தார், குவைத், பஹ்ரைன், சிறிலங்கா, மொரிசியஸ் உள்ளிட்ட 35-க்கும் மேலான உலக நாடுகளிலிருந்து வரும் தமிழ்த் தொழிலதிபர்கள் – திறனாளிகளை சந்திக்கவும், தொழில் – வணிக உறவுகள் உருவாக்கிக் கொள்ளவும் அரிய வாய்ப்பாக இம் மாநாடு அமையும்.
 எழுமின் அமைப்பு முதல் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாட்டினை கடந்த 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை மாநகரிலும், இரண்டாம் மாநாட்டினை மலேசியா கோலாலம்பூர் சைபர் ஜயா பல்கலைக் கழகத்திலும் நடத்தின. கடந்த மே மாதம் நடத்த மலேசிய மாநாட்டில் பங்கேற்ற தமிழ்த் தொழிலதிபர்களுக்கிடையே 102 தொழில் – வணிகப் புரிந்துமை ஒப்பந்தங்கள் கைச் சாத்திடப்பட்டன. அவற்றில் சுமார் 70 ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டும்விட்டன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஓராண்டு காலத்திற்குள் மூன்று உலக மாநாடுகள் நடத்திய தனிச் சிறப்பினையும் எழுமின் அமைப்பு சாதித்துள்ளது.
 ஐக்கிய நாடுகள் அவை 2030 ஆம் ஆண்டுக்குள் சாதிக்கப்படவேண்டுமென வகுத்துள்ள நீடித்து நிலைக்கும் வளர்ச்சி இலக்குகளின் அடிப்படையில் எழுமின் அமைப்பு இயங்குகிறது. குறிப்பாக பொருளாதாரத் தேக்க நிலை பற்றிக் கொள்கிற இக்காலத்தில் எல்லோரும் இணைந்து ஒத்துழைத்தால் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியுமெனவும் எழுமின் அமைப்பு நம்புகிறது.
 தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. எம்.சி. சம்பத் அவர்களும், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு – அகழ்வாராய்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மாஃபா பாண்டியராஜன் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிறுவனர் – துணைவேந்தருமான திரு.டி.ஆர் பாரிவேந்தர் அவர்களும் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.
 முதன்முறையாக உலகத்தமிழர் உயர் விருதுகளையும் இம்மாநாட்டில் எழுமின் அமைப்பு அறிமுகப்படுத்துகிறது. உலகளவில் புகழுற்ற தொழில்முனைவோரும், பல்துறை சாதனையாளர்களும் நவம்பர் 15 அன்று மாலை விருது வழங்கிச் சிறப்பிக்கப்படுவார்கள். அந்நாளில் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் நூறு பாடகர்களுடன் இணைந்து வழங்கும் “தமிழோசை”  என்ற சங்கப் பாடல்கள் நிகழ்வும் நடைபெறும்.
 இம் மாநாட்டில் IT துறை, ஏற்றுமதி – இறக்குமதி வணிகம், எலக்ட்ரானிக்ஸ், நிதி, லாஜிஸ்டிக்ஸ், மருத்துவம், கல்வி, விவசாயம், இயற்கை விவசாயம், சித்த – ஆயுர்வேத மருத்துவம், யோகா, இசை, விளையாட்டு, உலகம் முழுதும் தமிழ் கற்பித்தல் உள்ளிட்ட 30 துறைகளை இணைக்கிறது. தமிழரின் முதலீட்டு வலிமையை வலுப்படுத்தும் திட்டங்களையும் இந்த மாநாடு விவாதிக்கவுள்ளது. குறிப்பாக அனைத்துலக அளவில் தாய்மொழி சார்ந்த சிறு முதலீட்டாளர்களை இணைக்க சிறப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. சிறு – குறு தொழில்கள் தொடங்க விரும்பும் இளையர்களுக்கு இந்நிதி பேருதவியாக அமையும்.
 அத்துடன் தமிழர் தொழில் – வணிக வளர்ச்சிக்கென பல்வேறு நாடுகளில் சிறப்பு அலுவலகங்களையும் The Rise – எழுமின்அமைப்பு நிறுவுகிறது.
 இம்மாநாட்டின்போது மிக முக்கியமான பல அனைத்துலக தமிழர் தொழில் – வணிக வளர்ச்சிக்கான அமைப்புகளும் தொடங்கப்படவுள்ளன. அனைத்துலக தமிழ் ஏற்றுமதி – இறக்குமதியாளர்கள் கூட்டமைப்பு, அனைத்துலக தமிழ் பட்டயக்கணக்கர்கள் மற்றும் நிதி மேலாண்மையாளர்கள் கூட்டமைப்பு, அனைத்துலக தமிழ் சில்லறை வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பு, தமிழருக்கான வங்கி நிறுவுதல், தமிழர் தயாரிப்புகள் – சேவைகளை சந்தைப்படுத்த அனைத்துலக அளவிலான சிறப்பு நிறுவனம் போன்றவை முக்கியமானவையாகும். 
 ஐம்பதுக்கும் மேலான நிபுணர்களின் கருத்துரைகளும் இம்மாநாட்டில் இடம்பெறும்.
 மேலும் பல சிறப்புகளுடன் நடைபெறும் இம் மாநாட்டில் பங்கேற்றுப் பயனடைந்திட தமிழுலகை அழைக்கிறோம். சென்னைக்கு வருகை தரும் உலகத் தமிழர்களையும் வரவேற்கிறோம்.
 பங்கேற்கவும், தமிழுலகிற்கு இச்செய்தியைப் பகிர்ந்து உதவும்படியும் அன்புடன் வேண்டுகிறோம்.