செல்போனில் பெண்கள் குளிப்பதை படம் பிடித்த ஏட்டு

அரியலூர் அருகே பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போலீஸ் ஏட்டுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அடுத்த வெங்கனூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்ப்பவர் சேகர் (44). அரியலூர் டிஎஸ்பி அலுவலகம் எதிர்புறத்திலுள்ள அவரது நண்பர் கடைக்கு நேற்று சென்றார். அப்போது அந்த கடையின் மொட்டைமாடிக்கு சென்ற அவர், அப்பகுதியின் கீழ்புறத்திலுள்ள குடியிருப்பு பகுதியில் பெண்கள் குளிப்பதை, சேகர் தனது செல்போனில் ரகசியமாக படம் பிடித்தார். இதை கவனித்த அப்பகுதி பெண்கள், அவரை கண்டித்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் அந்த இடத்தில் இருந்து செல்லாமல் தொடர்ந்து படம் எடுத்து கொண்டிருந்தார். இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு, போலீஸ்காரர் சேகரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் நிலைகுலைந்த சேகர் அங்குள்ள ஒரு கடைக்குள் புகுந்து ஒளிந்து கொண்டார். இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்தனர். தகவலறிந்து வந்த அரியலூர் நகர காவல் நிலைய எஸ்ஐ நந்தகுமார் சம்பவம் குறித்து பொதுமக்களிடம் விசாரித்தார். பின்னர் போலீசார், தலைமை காவலர் சேகரை காவல் நிலையத்தில் வைத்து விசாரிப்பதற்காக அவரை அழைத்து செல்ல முயற்சித்தனர். ஆனால் போலீசாருக்கு அவர் ஒத்துழைக்காமல் முரண்டு பிடித்தார். அப்போது கூடி இருந்த பொதுமக்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூச்சலிட்டனர். பின்னர் அந்த போலீஸ்காரரை தரதரவென இழுத்து சென்று வேனில் ஏற்றினர்.