மதுக்கடையை மூட வலியுறுத்தி பா.ஜனதா பேரணி

மதுக்கடையை மூட வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் சென்னையில் இன்று கோட்டையை நோக்கி பேரணி நடைபெற்றது. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். அகில இந்திய செயலாளர் முரளிதரராவ் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் மதுவால் ஏற்படும் சீரழிவை வலியுறுத்தும் வகையில் பாடை கட்டியும், வெள்ளை சேலை கட்டி பெண்களும் கலந்து கொண்டனர். பா.ஜனதா மது இல்லாத ஆரோக்கியமான தமிழகத்தை விரும்புகிறது. ஆனால் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மதுவுக்கு துணை போகிறது. நாங்கள் பசும்பால் வேண்டும் என்கிறோம்.

அவர்கள் பட்டைச் சாராயம் வேண்டும் என்கிறார்கள், இதுதான் பா.ஜனதாவுக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு. பசுவை பாதுகாக்கவும், பெண்களை பாதுகாக்கவும் பா.ஜனதா என்றும் துணை நிற்கும் என்றார். தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், தமிழகத்தில் கடைசி கடை மூடப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் தமிழக அரசு உடனடியாக கையில் எடுக்க வேண்டிய வி‌ஷயம் ஒன்றை மூடுவது, இன்னொன்றை திறப்பது தான். அதாவது அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மறுவாழ்வு மையங்களை திறக்க வேண்டும். அதே நேரத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும், தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றியது தி.மு.க. இதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பிராயச்சித்தம் தேடப் போகிறார். ஒரு காலத்தில் இந்துக்களை திருடர்கள் என்று கூறியவர்கள் இன்று கோவில் குளங்களை தூர்வாரி பாவ விமோசனம் தேடிக் கொள்கிறார்கள். படித்து பழகு என்று சொல்ல வேண்டியவர்கள், குடித்து பழகு என்று தமிழகத்தை ஆக்கிவிட்டார்கள்.

எனவே ஒரு கட்சிக்கு மாற்றாக இன்னொரு திராவிட கட்சி இருக்க முடியாது, இந்த நாட்டை காவிகள் ஆளலாம், பாவிகள் ஆளக்கூடாது என்பதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அனைவரும் கோட்டையை நோக்கி புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றதும் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட 1,500 பேரை போலீசார் தடுத்தனர். போராட்டத்தில் மாநில நிர்வாகிகள் வானதி சீனிவாசன், பி.டி.அரசகுமார், எம்.என்.ராஜா, கரு.நாகராஜன், தேவநாதன், நரேந்திரன், மகாலட்சுமி, வக்கீல் பிரிவு மாநில செயலாளர் தங்கமணி, கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் வி.எஸ்.ஜெ.சீனிவாசன், இளைஞர் அணி வினோத் செல்வம், ஜி.கே.எஸ்.லட்சுமி, சுரேஷ், ஜமீலா, ரவிச்சந்திரன், பிரசாத், மாவட்ட தலைவர்கள் டால்பின் ஸ்ரீதர், தனஞ்செயன், கிருஷ்ணகுமார், பாஸ்கர், மோகனராஜா, ஜெய்சங்கர், லோகநாதன், குரு ஜான், மீனவர் அணி சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.